தீர்ப்பாய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க புதிய ஆணையம் அமைக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு தீர்ப்பாயங்களின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக, ‘தேசிய தீர்ப்பாய ஆணையம்’ என்ற புதிய அமைப்பை உருவாக்க வேண்டும்,’ என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் மக்கள் குறைகளை தீர்ப்பதற்காகவும், அரசு சார்ந்த துறைகளின் பிரச்னைகளை தீர்ப்பதற்காகவும் பல்வேறு தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக, இந்த உறுப்பினர்கள் நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் நடப்பதாகவும், பாரபட்சம் காட்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சில நாட்களுக்கு முன்பாக தீர்ப்பை ஒத்திவைத்தது.இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு நேற்று அறிவித்தது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* தேசிய பசுமை தீர்ப்பாயம், தேசிய நிறுவனங்களுக்கான தீர்ப்பாயம் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள 19 தீர்ப்பாயங்களின் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு, ‘தேசிய தீர்ப்பாய ஆணையம்’ என்ற புதிய அமைப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

* அந்த ஆணையத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அல்லது அவரால் நியமிக்கப்படும் நபர் இடம் பெற வேண்டும்.

* இந்த புதிய ஆணையம் அளிக்கும் பரிந்துரையை மூன்று மாதங்களில் மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.

* தீர்ப்பாய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் விதிமுறைகளையே, இந்த ஆணையமும் பின்பற்றப்பட வேண்டும்.

* பத்து ஆண்டுகள் வழக்கறிஞராக பணி புரிந்தவர்கள், இந்த தீர்ப்பாயங்களில் உறுப்பினராக தகுதி உடையவர்கள். இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>