×

வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற டிரம்ப் நிபந்தனை அந்த பெரும் தவறு மட்டும் நடந்தால்...

வாஷிங்டன்: ‘தேர்தலில் பிடென் வென்றதாக எலக்டோரல் காலேஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகிறேன்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்.அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் 306 எலக்டோரல் ஓட்டுகளை பெற்று வென்றுள்ளார். தற்போதைய அதிபர் டிரம்ப் 232 ஓட்டுகளுடன் தோல்வியை சந்தித்துள்ளார். அதிபரை எலக்டோரல் காலேஜ் எனப்படும் வாக்காளர் பிரதிநிதிகளே தேர்ந்தெடுப்பர். இன்னும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படவில்லை. அதே போல பிடென் வென்றதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அடுத்த மாதம் 14ம் தேதி வாக்காளர்கள் பிரதிநிதிகள் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

அதில், தேர்தல் வாக்குகள் அடிப்படையிலேயே வாக்காளர்கள் பிரதிநிதிகள் வாக்களிப்பர். எனவே, பிடென் வெற்றி உறுதியானதே. ஆனாலும், டிரம்ப் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் முரண்டுபிடிக்கிறார்.இந்நிலையில், வெள்ளை மாளிகையில் ‘நன்றி தெரிவிப்பு நாள்’ கொண்டாட்டத்தில் அதிபர் டிரம்ப் பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், ‘எப்போது வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறப் போகிறீர்கள்?’ ‘இதுதான் வெள்ளை மாளிகையை நீங்கள் கொண்டாடும் கடைசி நன்றி தெரிவிப்பு நாளா?’ என கேள்வி கேட்டு வெறுப்பேற்றினர். இதற்கு டிரம்ப் அளித்த பதில்:தோல்வியை ஒப்புக் கொள்வது ரொம்ப கஷ்டம்.  எலக்டோரல் காலேஜ் விரைவில் தங்கள் முடிவை அறிவிக்கப் போகிறார்கள். அவர்கள், பிடெனின் வெற்றியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், நான் வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறுகிறேன். ஆனால் அப்படி அவர்கள் செய்தால், அது மிகப்பெரிய தவறாக இருக்கும்.

இந்த தேர்தலில் மாபெரும் முறைகேடு நடந்திருக்கிறது. ஏதோ மூன்றாம் தர நாட்டில் இருப்பதை போல நமது தேர்தல் வாக்களிப்பு நடைமுறைகள் உள்ளன. ஆனால் எந்த முறைகேடும் நடக்கவில்லை என தேர்தல் அதிகாரிகள் கூறுவது ஆச்சரியமாக உள்ளது. பிடென் 8 கோடி வாக்கு பெற்றிருப்பதாக கூறுகிறார்கள். ஒட்டுமொத்த கறுப்பினத்தவர்கள் ஓட்டையும் பெற்ற முன்னாள் அதிபர் ஒபாமாவை விட பிடென் அதிகமான வாக்கை பெறும் தலைவரா என்ன? இதிலிருந்தே எங்கோ தவறு நடந்திருப்பது தெரியவில்லையா?இதை ஏன் எனது கடைசி நன்றி தெரிவிப்பு நாள் என நினைக்கிறீர்கள்? அதை முடிவு செய்ய நீங்கள் (பத்திரிகையாளர்களை பார்த்து) யார்? ஏன் எனது 2வது ஆட்சிக் காலத்தின் முதல் நன்றி தெரிவிப்பு நாளாக கூட இது இருக்கலாம். இவ்வாறு டிரம்ப் கூறினார்.

Tags : Trump ,White House , Trump's condition to leave the White House If only that big mistake happened ...
× RELATED கிரிமினல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் டிரம்ப் ஆஜர்