×

வங்கக் கடலில் நாளை புதிய புயல் சின்னம் உருவாகிறது: நாகப்பட்டினம் அருகே டிச. 2ல் கரையை கடக்கிறது

சென்னை: வங்கக் கடலில் தெற்கு அந்தமானில் வளி மண்டல காற்று சுழற்சி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை காற்றழுத்தமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்தம் வலுப்பெறும் நிலையில் புயலாக மாறி தமிழகத்திற்கு வரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போதுதான் ஒரு புயல் தமிழகத்தை மிரட்டி சென்ற நிலையில் மீண்டும் ஒரு புதிய புயல் உருவாகலாம் என்று அறிவித்துள்ளது மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட கிழக்கு பருவமழை தற்போது தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ள நிலையில் கடந்த வாரம் தென்கிழக்கு வங்கக் கடலில் நிவர் புயல் உருவானது. அது தீவிரப் புயலாக மாறியது. வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மரக்காணம் அருகே 25ம் தேதி இரவு பலம் இழந்து கரையைக் கடந்தது. தற்போது அந்த புயல் மகாராஷ்ட்ரா ேநாக்கி நகர்ந்து சென்றுள்ளது. நிவர் புயல் காரணமாக தமிழக கடலோரப் பகுதியில் கோடியக்கரை முதல் சென்னை வரை பலத்த மழை கொட்டித் தீர்த்தது. கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

ஒரு லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மொத்தத்தில், 16க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுவதுடன், பல இடங்களில் தேங்கியும் உள்ளது. இதனால் பல ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மழை நீர் வடிந்து மக்கள் சகஜ நிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், வட கிழக்கு திசையில் இருந்து குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசி வருவதால், மீண்டும் புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. நிவர் புயல் கரையைக்கடந்த நிலையில், தமிழக கடலோரப் பகுதியில் மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நேற்று சோளிங்கரில் 230 மிமீ மழை பெய்துள்ளது. இது தான் நேற்றைய மழையின் அதிகபட்ச அளவு. இது இயல்பு நிலையைவிட அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவு பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நாளை குறைந்த காற்றழுத்தமாக மாறும். இதன் காரணமாக  நாளை மற்றும் நாளை மறுநாள் தெற்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும். இந்நிலையில் இந்த காற்றழுத்தம் மேலும் வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய தமிழ்நாடு கடலோரப் பகுதிகள், தென் கடலோர ஆந்திரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும். பின்னர் அந்த காற்றழுத்தம் புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.வட மாவட்டங்களில் நிவர் புயல் பாதிப்பு இன்னும் கணக்கிடப்படவே இல்லை. பாதிப்பில் இருந்து மக்கள் மீளவில்லை. அதற்குள் மீண்டும் ஒரு புயல் வீசும் என்று கூறப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Tags : storm ,Bay of Bengal ,border , Tomorrow in the Bay of Bengal New storm symbol emerges: Dec. near Nagapattinam. Crossing the border at 2 p.m.
× RELATED அரிச்சல்முனைக்கு வரும் சுற்றுலா...