×

வருசநாடு அருகே கெங்கன்குளம் கண்மாயில் 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்தன

வருசநாடு: வருசநாடு அருகே கெங்கன்குளம் கண்மாயில் 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் செத்து மிதந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம், வருசநாடு அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கெங்கன்குளம் கண்மாய் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ளது. இந்த கண்மாயில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் மீன் குஞ்சுகள் வளர்ப்பது வழக்கம். கண்மாயில் கட்லா, ரோகு, மிருகால், சிசி, ஜிலேபி உள்ளிட்ட 60 ஆயிரம் மீன் குஞ்சுகளை, இந்தாண்டு வளர்க்கும் பணியில் விவசாயி முருகன் ஈடுபட்டுள்ளார்.

சில தினங்களாக கடமலை மயிலை ஒன்றியத்தில் கனமழை பெய்தது. மழையால் சின்னச்சுருளி ஆற்றில் இருந்து நீரை கண்மாய்களில் அதிகளவில் தேக்கி மீன் வளர்ப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு மீன் குஞ்சுகள் அனைத்தும் மர்மமான முறையில் செத்து மிதந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியினர் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், தகவலறிந்து கடமலைக்குண்டு காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து, செத்து மிதந்த மீன் குஞ்சுகளை பார்வையிட்டனர். செத்து மிதந்த மீன் குஞ்சுகளின் மதிப்பு ரூ.2 லட்சம். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்மாயில் விஷம் கலக்கப்பட்டதா? அல்லது மீன் இறை உணவு பண்டங்களில் கலப்படம் கலக்கப்பட்டதா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

இது குறித்து விவசாயி முருகன் கூறுகையில், ‘‘இறந்த மீன்குஞ்சுகளை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை வந்தபின்பு மீன் குஞ்சு எவ்வாறு இருந்தது என்பது குறித்து தெரியவரும். பாதிப்படைந்த எனக்கு தேனி மாவட்ட ஆட்சியர் நிவாரணம் வழங்க வேண்டும்,’’ என்றார்.

Tags : Varusanadu ,Kenkankulam , Fish
× RELATED தேர்தல் முடிந்தவுடன் மல்லப்புரம் மலைச்சாலை சீரமைப்பு தொடங்குமா?