புயல் பாதித்த பகுதிகளில் கள ஆய்வு: சிறப்பு ரயில்கள் இன்று வழக்கம்போல் இயக்கம்

சேலம்: தமிழகத்தை பெரிய அளவில் தாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிவர் புயல், புதுச்சேரி பகுதியில் வலு இழந்து கரையை கடந்தது. இருப்பினும் சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் கடும் மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக தெற்கு ரயில்வே பகுதியில் இயங்கும் 69 சிறப்பு ரயில்கள் முழுமையாகவும், 21 சிறப்பு ரயில்கள் ஒரு பகுதியாகவும் கடந்த 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. புயல் கரையை கடந்தவும், சென்னை, திருச்சி ரயில்வே கோட்டங்களுக்கு உட்பட்ட புயல் பாதிப்பு பகுதிகளில் முழு அளவில் தண்டவாளம், சிக்னல், ரயில்வே பாலப்பகுதிகளை ஆய்வு நடத்த தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ் உத்தரவிட்டார். இதன்பேரில், இரு கோட்டங்களிலும் புயல் பாதிப்பிற்கு உள்ளான இடங்களில் தீவிர கள ஆய்வில் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வுப்பணி நேற்றிரவு முடிந்தது. பெரிய அளவில் எந்த இடத்திலும் ரயில் பாதை பாதிப்படையவில்லை. இதனால், ரயில்களை மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து இன்று (27ம் தேதி) முதல் அனைத்து சிறப்பு ரயில்களும் வழக்கம் போல் இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை-திருச்சி-மதுரை மார்க்கத்திலும், சென்னை-கோவை-திருவனந்தபுரம் மார்க்கத்திலும் 80க்கும் அதிகமாக ரயில்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களுக்கு அதிகப்படியான மக்கள் முன்பதிவு செய்து வருகின்றனர். இதனால், வரும் நாட்களில் அந்த ரயில்கள் அனைத்தும் முழுமையாக நிரம்பியிருக்கும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

>