அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி...புயலாக மாற அதிக வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் அலர்ட்!!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி நவம்பர் 30ம் தேதி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு என தெரிவித்தார்.

மேலும் புதிதாக உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறி பின்னர் புயலாக மாற அதிக வாய்ப்புள்ளதாகவும் கரையை கடந்த நிவர் புயல் தெற்கு ஆந்திராவில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது என்றும் எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய பாலச்சந்திரன், வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 34 செமீ மழைப்பொழிவு இருக்கும். கடந்த 1ம் தேதி முதல் இன்று வரை 29 செ.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 15% குறைவு, என்றார்.

இதனிடையே ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர பகுதிகளில் ஒட்டி நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் 23 செ.மீ. மழை பெய்துள்ளது. 

Related Stories:

>