நிவர் புயல் தாக்கத்தால் கடும் பாதிப்பு 30 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில், நிவர் புயல் தாக்கத்தால் 30 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி நெற்பயிர் நீரில் மூழ்கி நாசமானது. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. வீடுகள் சேதமடைந்தது. வங்கக்கடலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான குறைந்த காற்றழுத்தம் நிவர் புயலாக மாறியது. அதைத்தொடர்ந்து, அதிதீவிர புயலாக மாறியது. அதனால், திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை நீடித்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய கனமழை, அதிகாலை வரை இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக, சேத்துப்பட்டு பகுதியில் 130.20 மிமீ மழை பதிவானது. அதேபோல், ஆரணி 84.20 மிமீ, செய்யாறு 65 மிமீ, செங்கம் 28.40 மிமீ, ஜமுனாமரத்தூர் 92.10 மிமீ, வந்தவாசி 112 மிமீ, போளூர் 88.50 மிமீ, திருவண்ணாமலை 69.60 மிமீ, தண்டராம்பட்டு 62.40 மிமீ, கலசபாக்கம் 99 மிமீ, கீழ்பென்னாத்தூர் 119.20 மிமீ, வெம்பாக்கம் 109.50 மிமீ மழை பதிவானது.

கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. சாலைகளில் மழை வெள்ளம் கரைபுரண்டது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை வெள்ளத்தால் சாலைகள் சேதமடைந்துள்ளன. திருவண்ணாமலை நகரின் விரிவாக்கப் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை சுற்றிலும் குளம்போல வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. தொடர்ந்து பெய்த மழையால், மாவட்டம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த சம்பா பருவ நெற்பயிர் நீரில் மூழ்கி நாசமானது. அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர் நீரில் மூழ்கியதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முறையான கணக்கெடுப்புக்கு பிறகு, பாதிப்பு பரப்பளவு மேலும் அதிகரிக்கும் என தெரிகிறது.

அதேபோல், படவேடு, கண்ணமங்கலம், கலசபாக்கம், செங்கம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்திருந்த வாழை மரங்கள் சரிந்து நாசமானது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 237 மின் கம்பங்கள் சரிந்தன. முன்னெச்சரிக்கையாக மின்தடை செய்யப்பட்டதால், உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது.

திருவண்ணாமலை, கண்ணமங்கலம், போளூர், சேத்துப்பட்டு, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் 66 சாலையோர புளிய மரங்கள் வேருடன் சரிந்து விழுந்தன. அதேபோல், 86 குடிசை வீடுகள், 27 ஓட்டு வீடுகள் இடிந்து விழுந்தன. முன்கூட்டியே சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மாவட்டம் முழுவதும் பள்ளிகள், சமுதாய கூடங்கள், திருமண மண்டபங்களில் அமைக்கப்பட்டுள்ள 257 சிறப்பு முகாம்களில், 7,846 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடைகள், மருந்து, மாத்திரைகள் போன்றவை வழங்கப்பட்டன. கனமழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால், இயல்புநிலை திரும்பும் வரை சிறப்பு முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். பெரணமல்லூர்: பெரணமல்லூர் ஒன்றியத்தில் மோட்சவாடி கிராமத்தில் 4 வீடுகள், மேலத்தாங்கல், கொழப்பலூர், நல்லடிசேனை உள்ளிட்ட கிராமங்களில் 4 வீடுகள் இடிந்து சேதமடைந்தது. மோட்சவாடி பகுதியில் ஒரு பசுமாடு பலியானது. கோழிப்புலியூர், சோழவரம் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்தன.

செங்கம்: செங்கம்   தாலுகாவில் சூவலசை, தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு கிராமங்களில், அறுவடைக்கு தயாராக இருந்த பல ஆயிரம் ஏக்கர் நெல், கரும்பு, வாழை போன்றவை சேதமடைந்தன.போளூர்: போளூர் நகர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் கனமழையால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன. 99 புதுப்பாளையம், படவேடு, அரியாத்தூர், செங்குணம், பெரியகரம் கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் 13 வீடுகள்  சேதமடைந்தன.

ஜவ்வாதுமலையில் பெய்த கனமழையால் போளூர் மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்திமூர், மாம்பட்டு, பெரியகரம், பூங்கொல்லைமேடு ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆரணி: ஆரணி சுற்று வட்டார பகுதிகளில் மின்கம்பங்கள், 50க்கும் மேற்பட்ட மரங்கள் வேராடு சாய்ந்தன. 300 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமானது. சாலைகளில் முறிந்து விழுந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக அகற்றினர். கனமழையால் 2 ஆண்டுகளுக்கு பிறகு கமண்டல நாகநதியில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்று மேம்பாலத்தின் மேல் நின்று மலர்தூவி வரவேற்றனர். இளைஞர்கள் ஆற்றில் இறங்கி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பெரும்பாலான கிராமங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து, ஒயர்கள் அறுந்து கிடப்பதால்  கடந்த 3 நாட்களுக்கும் மேலாக மின்விநியோகம் தடைபட்டு, இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சேத்துப்பட்டு: சேத்துப்பட்டில் அதிகபட்சமாக 130.20 மி.மீ மழை பதிவாகியாகிய நிலையில், சூறைகாற்றால் இடையங்கொளத்தூர், நம்பேடு பகுதிகளில் 8 புளியமரங்கள் சாய்ந்தன. நம்பேடு கிராமத்தில் ஒரு வீடும், திருமங்கலத்தில் ஒரு கூரை வீடும் இடிந்தது. ஒன்றியத்தில் 9 ஏரிகள் முழுவதுமான நிரம்பியுள்ளன. 85 ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

முழுவீச்சில் மீட்பு பணிகள் -கலெக்டர்

செய்யாறு நகரில் புயல் மழையால் இடிந்த வீடு, குடிசை வாழ் மக்கள் தங்கியுள்ள சிறப்பு முகாம், காந்தி சாலையில் மழைநீர் கால்வாயை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் சந்தீப் நந்தூரி, எம்எல்ஏ தூசி மோகன் நேற்று பார்வையிட்டனர். பின்னர், கலெக்டர் கூறுகையில், `திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மழையால் வீடுகள் இடிந்தபோதிலும் உயிர் சேதம் எதுவுமில்லை. ஏரிகளிலும் உடைப்பு இல்லை. போளூர் பகுதிகளில் அதிக மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மழை வெள்ளத்தில் மூழ்கிய பயிர் சேதம் குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது. புயல் மழை பாதித்த பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறோம் என தெரிவித்தார்.

ஆய்வின்போது ஆர்டிஓ விமலா, சுகாதார மாவட்ட துணை இயக்குனர் அஜிதா, நகராட்சி ஆணையாளர் பிரீத்தி, தாசில்தார் திருமலை, சமூக பாதுகாப்பு தாசில்தார் சுபாஷ், பிடிஓக்கள் சீனிவாசன் மயில்வாகனன் உடன் இருந்தனர்.

18 கால்நடைகள் பலியானது

திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், சேத்துப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மழையால் 7 மாடுகள் உட்பட 18 கால்நடைகள் பலியானது. மேலும் பயிர் சேதங்களால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் மழையில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Related Stories:

>