ஹெல்மெட் அணியாமல் வந்ததை கேட்டதற்காக ஜார்க்கண்ட் அமைச்சரின் மகள் சாலையில் தர்ணா !!

ஜாம்ஷெட்பூர்,:ஹெல்மெட் அணியாமல் வந்ததை போலீசார் கேட்டதற்காக, ஜார்க்கண்ட் அமைச்சரின் மகள் சாலையில் தர்ணா போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அடுத்த சச்சி கோல்கக்கரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்ேபாது ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை மடக்கி போலீசார் அபராதம் விதித்தனர். இதற்கிடையில், ஹெல்மெட் அணியாமல் பைக்கில் வந்த ஜோடிகளை போலீசார் மடக்கி பிடித்து போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அபராதம் செலுத்த அறிவுறித்தனர். ஆனால், பைக்கின் பின் சீட்டில் அமர்ந்திருந்த பெண், ‘நான் யார் என்று தெரியுமா?’ என்று போலீசாரிடம் கேட்டார். அதற்கு போக்குவரத்து போலீசார், ‘யாராக இருந்தாலும் அபராதம் கட்டித்தான் ஆக வேண்டும்’ என்றனர்.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அந்த பெண் தன்னை மாநில போக்குவரத்து அமைச்சர் சம்பாய் சோரனின் மகள் துக்னி சோரன் என்று கூறினார். அப்போது போக்குவரத்து இன்ஸ்பெக்டர், ‘நீங்கள் அமைச்சரின் மகள் என்றால், அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள். அல்லது யாரிடமாவது பேசி உறுதிப்படுத்துங்கள்’ என்று கூறினார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, அந்த பெண் திடீரென தன்னுடன் வந்த வாலிபருடன் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். பின்னர், அந்த பெண் எம்எல்ஏ ஒருவரிடம் பேசி, தனது தந்தையை போலீசாரிடம் பேச ஏற்பாடு செய்தார். அதன்பின், அந்த பெண்ணை போலீசார் செல்ல அனுமதித்தனர்.

இதனால், 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அமைச்சரின் மகள் கூறுகையில், ‘போலீசாரால் நான் மிரட்டப்பட்டேன். ஹெல்மெட் போடவில்லை என்றால் அபராதம் செலுத்த சொல்ல வேண்டியதுதானே? எதற்காக மிரட்டினார்கள்? அந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இதுகுறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அமித் நாயக் கூறுகையில், ‘போலீசார் அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஹெல்மெட் போடாமல் பைக்கில் அபராதம் கட்ட சொன்னோம். ஆவணங்களை காட்ட சொன்னோம். அதனால், அந்த பெண் தர்ணாவில் ஈடுபட்டார்’ என்றார்.

Related Stories:

>