×

கொரோனாவால் மூடப்பட்ட நிலையில் டிச. 1 முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்க அனுமதி மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

டெல்லி, :கொரோனாவால் மார்ச் முதல் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் வரும் டிச. 1 முதல் மருத்துவ கல்லூரிகள் திறக்க அனுமதியளித்து மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மூடப்பட்டு இருக்கின்றன. நடப்பு கல்வியாண்டுக்கான இன்ஜினியரிங் படிப்பு கலந்தாய்வு நிறைவுபெற்றுவிட்ட நிலையில், தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மூடப்பட்டு இருக்கும் மருத்துவ கல்லூரிகளை மீண்டும் திறக்கவேண்டும் என்று தேசிய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையை ஏற்று மத்திய சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

இதுெதாடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘மருத்துவ கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கு சுகாதாரத்துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகத்திடம் ஒப்புதல் கடிதம் பெற்று உள்ளது. அதனால் மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட மருத்துவ கல்லூரிகளை அடுத்த மாதம் (டிச.) 1ம் தேதியோ அல்லது அதற்கு முன்போ திறப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

மேலும், முதுநிலை மருத்துவ ‘நீட்’ தேர்வுக்கு இளநிலை மருத்துவ மாணவர்களை தயார்படுத்த வேண்டி இருக்கிறது. நடப்பு கல்வியாண்டுக்கான முதுநிலை ‘நீட்’ தேர்வை மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மருத்துவ கல்லூரிகளில் கொரோனா தவிர்த்து, பிற நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டும். பேரிடர் காலத்தில் மருத்துவ சேவை பற்றி தற்போதைய மருத்துவ மாணவர்களும் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். அதேசமயம் 2020-21 புதிய கல்வியாண்டு வகுப்பு பிப்ரவரி 1 முதல் தொடங்கும்.

புதிய முதுநிலை கல்வியாண்டு வகுப்பு ஜூலை 1 முதல் தொடங்கும். தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைகளின்படி. மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்பட்டால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு 80,000க்கும் குறைவான மருத்துவர்கள் வரக்கூடும். எனவே, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வகுப்புகளை மீண்டும் தொடங்க வேண்டியது அவசியம். மாநில, யூனியன் அரசுகள் தொற்றுநோய்கள் பரவுவதைத் தடுப்பது தொடர்பான அனைத்து வழிகாட்டுதல்களையும் கல்லூரிகளில் கடுமையாக பின்பற்றப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Government , Corona, Medical Colleges, States, Federal Government, Letter
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...