ஸ்ரீநகரில் பரபரப்பான பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் 2 ராணுவ வீரர்கள் பலி

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், ஸ்ரீநகரில் பரிம்போராவின் புறநகர்ப் பகுதியான குஷிபோராவில் பாதுகாப்பு படையை சேர்ந்த அதிவிரைவுப் படை வீரர்கள் நேற்று பிற்பகல் வேனில் சென்று கொண்டிருந்தனர். மக்கள் கூட்டம் நிறைந்த இடத்தில் வேன் வந்தபோது,  காரில் இருந்த 3 பேர் வேனை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில், படுகாயமடைந்த 2 வீரர்கள் அருகில் உள்ள ராணுவ மருத்துவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தவில்லை. வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டிருந்தால், பொதுமக்கள் தரப்பில் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.

ஆனாலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவதற்காக  அந்த பகுதி முழுவதையும் பாதுகாப்புப் படைகள் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. தீவிரவாதிகளை பிடிக்க, தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்நிலையில், காரில் வந்து துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் செல்லும் காட்சிகள், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. அதை போலீசார் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி ஜம்மு காஷ்மீர் ஐஜி விஜயகுமார் கூறுகையில், ‘‘‘காரில் வந்த 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 2 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், ஒருவர் காஷ்மீரைச் சேர்ந்தவர். லஷ்கர் இ தொய்பா அல்லது ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களாக இருக்கலாம். அவர்கள் விரைவில் பிடிபடுவார்கள்,’’ என்றார்.

Related Stories:

>