×

பாகல்கோட்டையில் பரவசம்: ஆடுகள் மேய்த்து கொண்டு குழல் ஊதும் கலியுக கண்ணன்

பாகல்கோட்டை: படிப்பறிவு இல்லாமல் ஆடு மேய்த்து வரும் விவசாய கூலி தொழிலாளி ஒருவர் குழல் ஊதி பாடுவது பலரை கவர்ந்துள்ளது. நாட்டின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தில் முக்கிய பங்களிப்பு கொடுக்கும் கிருஷ்ணன், மாடுகள் மேய்த்து கொண்டு குழல் ஊதி கோபியர்களை கவர்ந்ததாக புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு கலியுக கண்ணன் ஒருவர், ஆடுகள் மேய்க்கும்போது, குழல் ஊதி பாடும் பாடலால் பலரை கவர்ந்து வருகிறார்.

மாநிலத்தின் பாகல்கோட்டை மாவட்டம், பாதாமி தாலுகா, ஹிரேனசா கிராமத்தை சேர்ந்தவர் சிவப்பா நில்லண்ணனவர். படிப்பறிவு இல்லாத இவர், பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஜமீன்தார் ஒருவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்கும் வேலை செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் சாலையில் விழுந்திருந்த எலக்ட்ரிக்கல் பைப் ஒன்றை எடுத்து புல்லாங்குழலில் உள்ளது போல் துவாரம் போட்டார். அதை ஊதியபோது, புல்லாங்குழலில் வரும் ஒலி வந்தது. அதை பயன்படுத்தி பக்தி பாடல்கள் இசைக்க தொடங்கினார். தற்போது சாதாரண எலக்ட்ரிக்கல் பைப்பில் உருவாக்கியுள்ள குழல் மூலம் அழகான பாடல்கள் இசைத்தபடி ஆடுகள் மேய்த்து வருகிறார். அவரின் குழலிசைக்கு ஆடுகள் மட்டுமல்லாமல், அவ்வழியாக செல்லும் மனிதர்களும் மயங்கி விடுகிறார்கள். இவரை கலியுக கண்ணனாகவே அப்பகுதி மக்கள் அழைக்கிறார்கள்.


Tags : Kaliyuga Kannan , Ecstasy at Bagalkottai: Kaliyuga Kannan blowing the pipe while grazing the goats
× RELATED தேர்தல் பத்திரம் உலகின் மிகப்பெரிய...