×

நிவர் புயல் காரணமாக சென்னையில் பல்லாயிரம் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதி

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நிவர் புயல் அதிதீவிரம் அடைந்து நேற்று முன்தினம் இரவு 11  மணியளவில் மரக்காணம்- புதுச்சேரி இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக நேற்று அதிகாலை முதலே மெரினா, நொச்சிக்குப்பம், காசிமேடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகள் நிவர் புயலின் காரணமாக மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டது.  மெரினா கடற்கரையின் மணற்பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்று குளம் போல காட்சி அளித்தது. பொதுமக்கள் கடல் பரப்புக்கு செல்ல அனுமதி இல்லாததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால் பொது மக்கள் அலட்சியமாக கடல் பகுதிக்கு சென்று வந்தபடி இருந்தனர். அதேபோல், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடல் கொந்தளிப்பு வழக்கத்தை விடவும்  அதிகமாக காணப்பட்டதால் கடல் சீற்றம் அதிக அளவில் இருந்தது. ஆட்களை கீழே  தள்ளும் அளவுக்கு புயல் காற்று வீசியது. இந்தநிலையில் காசிமேடு  துறைமுகத்தில் போலீஸ் பாதுகாப்பு இல்லாததால் கடல் சீற்றத்தை பார்ப்பதற்கு  பொது மக்கள் கூட்டம் கூடி செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். மேலும், காசிமேடு  துறைமுகத்தில் இருந்து கடலுக்குள்  செல்லும் மீனவர்களுக்கு மீன் பிடிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதனால்  300க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்படிருந்தது.

 நகரின் முக்கிய சாலைகளான காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட மரங்கள் அடர்த்தியாக இருக்கும் தெருக்களில் மரக்கிளைகள் முறிந்து, விழுந்து கிடந்தது. அதேபோல் பாண்டிபஜாரில் சாலைகள் இருபுறமும் மரக்கிழைகள் முறிந்தும், மின்சார வயர்கள் அறுந்தும் தொங்கிக் கொண்டு இருந்தது. இந்தநிலையில் கடந்த புதன்கிழமை பெய்த மழையால் மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனி 4வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழை தண்ணீர் வடியாமல் இருந்தது. அதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் மற்றும் வாகனத்தில் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், செம்பரம்பாக்கம் ஏரி திறப்பை அடுத்து நேற்று ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு ஆற்றில் தண்ணீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியது.  மேலும் நிவர்புயல் கரையை கடந்தாலும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் பொதுமக்கள் வீட்ைடை விட்டு வெளியில் எங்கும்செல்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர்.



Tags : homes ,storm ,Chennai ,Nivar , Due to Nivar storm People in Chennai are suffering due to floods in thousands of houses
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...