×

ஆளுநர் மாளிகையில் எளிமையான விழா: மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பு: கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்: 33 அமைச்சர்களும் பதவியேற்றனர்

சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடந்த விழாவில், தமிழகத்தின் 12வது புதிய முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மு.க.ஸ்டாலினுடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். இந்த விழாவில் நீதிபதிகள், முன்னாள் துணை முதல்வர், கூட்டணி கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.   தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் மாபெரும்  வெற்றியை பெற்றது. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை.  தற்போது திமுகவினர் மட்டுமே 125 பேர் வெற்றி பெற்றுள்ளதால் திமுக தனி  மெஜாரிட்டி பெற்றுள்ளது. அதனுடன் திமுக சின்னத்தில் போட்டியிட்ட  கூட்டணி கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 133 பேர் ஆதரவு திமுகவுக்கு உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற குழு தலைவராக மு.க.ஸ்டாலினை ஒருமனதாக தேர்வு செய்தனர். இதை தொடர்ந்து, சட்டமன்ற  உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதத்துடன், கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதை ஏற்று அவரும் ஆட்சியமைக்க முறைப்படி அழைப்பு விடுத்தார். இதையடுத்து, பதவி  ஏற்பு விழா நேற்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் நடந்தது.  இதற்காக ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் மண்டபம் அருகே உள்ள மைதானத்தில்  சுமார் 750 பேர் கலந்து கொள்ளும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.  திமுக மூத்த தலைவர் ஆற்காடு வீராசாமி, மத்திய சென்னை  நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், கனிமொழி எம்பி, காங்கிரஸ் மூத்த  தலைவர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ்,  ஜெயக்குமார் எம்பி, கோபண்ணா, பொருளாளர் ரூபி மனோகரன், பாஜ மூத்த தலைவர் இல.கணேசன், பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். மேலும்,  கூட்டணி கட்சி தலைவர்களான தி.க. தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மமக  தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஈஸ்வரன் மற்றும்  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சுப.வீரபாண்டியன், எர்ணாவூர் நாராயணன், முன்னாள் எம்எல்ஏ முகமது அபுபக்கர் உள்ளிட்ட  தலைவர்கள் வந்திருந்தனர். சரியாக காலை 8.30 மணிக்கு மு.க.ஸ்டாலின்  மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி  ஸ்டாலின் அவரது மனைவி மற்றும் குழந்தைகள், மகள் செந்தாமரை, அவரது கணவர்  சபரீசன், மு.க.தமிழரசு, கயல்விழி, துரை தயாநிதி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதல்வருமான  ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சபாநாயகர் தனபால், தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதிகள் வந்திருந்தனர். 8.55 மணிக்கு மு.க.ஸ்டாலின் விழா மேடைக்கு வந்தார். அவரை அனைத்து அமைச்சர்களும் எழுந்து  நின்று கைதட்டி வரவேற்றனர். அவரை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதை தொடர்ந்து 9 மணிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித்  விழா அரங்கத்துக்கு வந்தார். அப்போது மு.க.ஸ்டாலின், புதிதாக அமைச்சர் பதவி ஏற்க இருந்த 33 பேரையும் அவருக்கு அறிமுகம் செய்து வைத்தார். மேலும் தனது குடும்பத்தினரையும் கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பேரக் குழந்தைகள் ஒவ்வொருவரிடமும் கவர்னர் தனித்தனியாக பேசி மகிழ்ந்தார். அதை தொடர்ந்து விழா தொடங்கியது. சரியாக 9.10 மணிக்கு தேசிய கீதமும், அதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்தும்  இசைக்கப்பட்டது. விழா தொடங்கியதும், தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வரவேற்று  பேசினார். அப்போது தலைமை செயலாளர், முதல்வராக மு.க.ஸ்டாலினை பதவி ஏற்க வரும்படி கேட்டுக் கொண்டார். 9.10 மணிக்கு மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.  அப்போது, ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்  எனும் நான்’ என்று உறுதியொழியை தொடங்கி ‘உளமாற உறுதி கூறுகிறேன்’ என்று  முடித்தார். அவருக்கு கவர்னர், பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும்  செய்து வைத்தார். மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து, கவர்னர்  பன்வாரிலால் புரோகித்துக்கு பூங்கொத்து கொடுத்தார். அவரை தொடர்ந்து, துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்ட 33 அமைச்சர்களும்  ‘உளமாற உறுதி கூறுகிறேன்’ என்ற உறுதி மொழியை கூறி வரிசையாக ஒவ்வொரு அமைச்சர்களாக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு  பிரமாணமும் எடுத்துக்கொண்டனர். விழா முடிந்ததும், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு கவர்னர் பன்வாரிலால்  அருகில் உள்ள தர்பார் மண்டபத்தில் தேநீர் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைத்து அமைச்சர்களும் கவர்னருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த  விழாவில், திமுக கூட்டணி எம்எல்ஏக்கள், தலைமை  செயலாளர் ராஜீவ் ரஞ்சன், டிஜிபி திரிபாதி மற்றும் அனைத்து ஐஏஎஸ், ஐபிஎஸ்  அதிகாரிகள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு விழாவை முன்னிட்டு, கிண்டி ஆளுநர் மாளிகை  அருகே உள்ள சாலையில்  திமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.  இரு பக்கமும் நின்று மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கொரோனா காலம் என்பதால் பதவி ஏற்பு விழா மிகவும் எளிமையாக நடைபெறும் என்று ஏற்கனவே மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். மேலும் வீட்டில் இருந்தபடியே கண்டுகளிக்கவும் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் பதவி ஏற்பு விழா அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதால், தொண்டர்களும், பொதுமக்களும் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். முதல்வராக பொறுப்பேற்றதும் முதலில் நேரடியாக கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீட்டுக்கு சென்றார். அவரை குடும்பத்தினர் வரவேற்றனர். அங்கு தனது தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். கலைஞரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய போது மு.க.ஸ்டாலின் கண்கலங்கினார். அவருக்கு சகோதரி செல்வி ஆறுதல் கூறினார்.  பின்னர் கலைஞர் நினைவிடம் புறப்பட்டு சென்றார். அங்கு அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து பெரியார் திடல் சென்று மரியாதை செலுத்தினார். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் கார்டனில் உள்ள மறைந்த பேராசிரியர் க.அன்பழகன் இல்லத்துக்கு சென்று அங்கு அவரது உருவபடத்துக்கு மரியாதை செலுத்தினார். இதையடுத்து, பிற்பகல் 12.10 மணிக்கு தலைமை செயலகம் புறப்பட்டு சென்று தனது பணிகளை தொடங்கினார். அப்போது, தனது முதல் பணியாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதை தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தை நடத்தினார். பின்னர் கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  பின்னர் அங்கிருந்து புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சிஐடி காலனி வீட்டுக்கு சென்றார். அவரை கனிமொழி எம்பி வரவேற்றார். அங்கு ராசாத்தி அம்மாளிடம் ஆசி பெற்றார். கலைஞர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.  முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில், ஆழ்வார்பேட்டை முதல் ஆளுநர் மாளிகை வரை டிஜிபி சைலேந்திர பாபு, போலீஸ் கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் கண்ணன், இணை கமிஷனர் செந்தில் குமாரி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற போது, அவரது உறுதியேற்பை படிக்கும் போது கவர்னர், எம்.கே.ஸ்டாலின் எனும் நான் என தொடங்கி வைத்தார், தொடர்ந்து ஸ்டாலின் படிக்க தொடங்கியதும், ‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான், சட்டப்படி அமைக்கப்பெற்ற இந்திய அரசின் நம்பிக்கையின் பால் உண்மையான நம்பிக்கையையும், மாறா பற்றும் கொண்டிருப்பேன் என்றும் இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியும், தமிழ்நாட்டு அரசியலமைப்பின்படியும், கடமையை நிலைநிறுத்துவேன் என்றும், உண்மையாகவும் என் கடமையையும் செய்வேன் என்றும் அரசியல் அமைப்பின் சட்டத்தின்படி, ஒருதலை சார்பின்றி, விறுப்பு வெறுப்பின்றி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும் உண்மையாக இருப்பேன் என்றும் அரசின் ரகசியங்களை நேரிடையாகவோ, மறைமுகமாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ தெரிவிக்க மாட்டேன்’’ என உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழியை படித்தார்.`உளமாற’ என்று உறுதிமொழிமுதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் `உளமாற’ உறுதி கூறுகிறேன் என்று கூறி உறுதிமொழி எடுத்து பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர். அதேபோன்று, பதவியேற்று முடிந்ததும், அனைத்து அமைச்சர்களும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு வணக்கம் தெரிவித்து விட்டு சென்றனர். ஆனால் ஒரு அமைச்சர் கூட மு.க.ஸ்டாலின் காலில் விழவில்லை. அதேபோன்று, 90 டிகிரியில் வளைந்து யாரும் வணக்கம் தெரிவிக்காமல், நேராக நின்றபடியே வணக்கம் தெரிவித்து சென்றனர்.கண் கலங்கிய துர்கா ஸ்டாலின்தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கும்போது, `முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று கூறி பதவியேற்றுக் கொண்டார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க அழைத்தபோதும், அவர் பதவியேற்றபோதும் விழா மேடையில் இருந்தவர்கள் கைதட்டி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்தனர். ஆனால், மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் கண்களில் மட்டும் கண்ணீர் வடிந்தது. கண்ணீரை துடைத்தபடி, கணவர் பதவியேற்பதை பார்த்து மேலும் கண் கலங்கினார். கடந்த சில ஆண்டுகளாக திமுக வெற்றிக்காக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து, ஏழை எளியவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், பணக்காரர்கள், இளைஞர்கள், படித்தவர்கள், பெண்கள் என அனைவரையும் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்தார். வீதி வீதியாக, சாலை சாலையாக இறங்கி சென்று பிரசாரம் செய்தார். இதன்மூலமே தற்போது தனி மெஜாரிட்டியுடன் வெற்றிபெற்று திமுக ஆட்சி அமைந்து மு.க.ஸ்டாலின் முதல்வராக முடிந்துள்ளது. சில ஆண்டுகளாக கணவர் பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைத்தது என்பதை நினைத்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் கண்கலங்கினார் என்றே கூறலாம்.எளிமையாக நடந்த பதவியேற்பு விழாதமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று காலை 9 மணிக்கு சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். கொரோனா காரணமாக பதவியேற்பு விழா மிக எளிமையாக நடந்தது. அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே ஆளுநர் மாளிகைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும், தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் கிண்டி, ஆளுநர் மாளிகை முன் திரண்டு இருந்தனர். அவர்களை போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனாலும் ஸ்டாலின் பதவியேற்க வந்தபோது சாலையின் இரு பக்கமும் நின்று உற்சாகமாக கை அசைத்தும், வாழ்த்து கோஷம் எழுப்பியும் வாழ்த்து தெரிவித்தனர்.பூங்கொத்து அளிக்க அனுமதி இல்லைவிழாவில் பங்கேற்க வந்த அனைவரும் பல்வேறு கட்ட பாதுகாப்பு சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். என்-95 மாஸ்க் அணியாமல் வந்தவர்களுக்கு கவர்னர் மாளிகை வளாகத்தில் இருந்த சுகாதார ஊழியர்கள் என்-95 மாஸ்க் வழங்கினர். மேலும், கொரோனா விதிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டது. விழா மேடையில், அவ்வப்போது கண்டிப்பாக அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை மைக்கில் வலியுறுத்தியபடியே இருந்தனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமைச்சர்களாக பதவியேற்ற யாருக்கும் பூங்கொத்து வழங்க அனுமதிக்கப்படவில்லை.ஸ்டாலினின் பேரக்குழந்தைகளை கொஞ்சிய கவர்னர்பதவியேற்பு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அமைச்சர்களை மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து தனது மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகள், மகள், மருமகன் மற்றும் பேரக்குழந்தைகளையும் கவர்னருக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது, மு.க.ஸ்டாலினின் பேரக்குழந்தைகளை கொஞ்சி தனது அன்பை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளிப்படுத்தினார். இது விழா அரங்கத்தில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.மு.க.ஸ்டாலின் காரில் பறந்ததுதேசியக்கொடிமுதல்வராக பதவியேற்க நேற்று காலை கிண்டி, கவர்னர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் வரும்போது அவரது காரில் திமுக கொடி பறந்தது. முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து, காலை 9.15 மணிக்கு அவரது காரில் இருந்த திமுக கொடிக்கு பதில், தேசியக்கொடி பறக்கவிடப்பட்டது. அதேபோன்று அனைத்து அமைச்சர்களின் காரில் இருந்த திமுக கொடிக்கு பதில் தேசியக்கொடி மாற்றப்பட்டது.கோட்டூர்புரம் விநாயகர் கோயிலில் மரியாதைபதவி ஏற்பு விழாவுக்கு, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து கிண்டி கவர்னர் மாளிகை நோக்கி மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டு சென்றார். அவர் செல்லும் வழியில் திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இந்நிலையில் கோட்டூர்புரம் அருகே சென்றபோது அங்குள்ள விநாயகர் கோயில் முன்பு மு.க.ஸ்டாலினின் கார் சிறிது நேரம் நின்றது. கோட்டூர்புரம் விநாயகர் கோயில் சார்பில் மு.க.ஸ்டாலினுக்கு மரியாதை கொடுக்கப்பட்டது. அதன்பிறகு அங்கிருந்து பதவியேற்பதற்காக புறப்பட்டு சென்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கோயில் இந்த கோட்டூர்புரம் விநாயர் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்த வழியாக செல்லும் போது இங்கு வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் விநாயகர் கோயிலில் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.திமுகவினர் உற்சாக வரவேற்புமுதல்வராக பதவியேற்றதும் மு.க.ஸ்டாலின் கிண்டி ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வரின் அலுவலகத்துக்கு வந்து பொறுப்பேற்றார். அப்போது சாலையின் இரண்டு பக்கமும் திமுக தொண்டர்கள் கூடி நின்று மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கோட்டையில் குவிந்த ஆதரவாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்களும் பதவியேற்றதும் சென்னை, தலைமை செயலகம் வந்து பொறுப்பேற்றுக் கொண்டனர். புதிதாக பதவியேற்ற திமுக அமைச்சர்கள் 33 பேரையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கானவர்கள் நேற்று தலைமை செயலகம் வந்தனர். அவர்கள் அனைவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவு அமைச்சர்களை சந்தித்து பூங்கொத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர்களுடன் தனித்தனியாக நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்….

The post ஆளுநர் மாளிகையில் எளிமையான விழா: மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்பு: கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்: 33 அமைச்சர்களும் பதவியேற்றனர் appeared first on Dinakaran.

Tags : Governor ,House ,Bc. ,G.K. stalin ,Chennai ,Gindi ,Governor House ,Chief Minister of Tamil Nadu ,President of Tamil Nadu ,Chief Minister of ,Tamil ,Nadu ,B.C. ,
× RELATED குலதெய்வ வழிபாட்டுக்கு தடைகேட்டாரா...