நிவர் புயல் கரையை கடந்தது பஸ்கள் 7 மாவட்டங்களில் வழக்கம்போல் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: புயல் மரக்காணம்-புதுச்சேரி இடையே கரையை கடந்ததையடுத்து 7 மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ‘நிவர்’ புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கடலூர், செங்கல்பட்டு உள்பட 7 மாவட்டங்களில் நேற்று முன்தினம் பகல் 1 மணிக்கு பேருந்து சேவையை நிறுத்தி தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் புயல் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கரையை கடந்துள்ளதால் 7 மாவட்டங்களில் பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 24ம் தேதி பிற்பகல் 1 மணி முதல் அரசு பேருந்துகள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது புயல் 25ம் தேதி இரவு 11 மணியளவில் மரக்காணம்- புதுச்சேரி இடையில் கரையைக் கடந்து விட்டதால் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நேற்று பிற்பகல் 12 மணி முதல் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று நிறுத்திவைக்கப்பட்ட 7 மாவட்டங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் சென்னையில் புயல், மழை காரணமாக பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளதால் அரசு அலுவலகங்கள் மற்றும் பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் ஊழியர்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும், மழையின் காரணமாக பொதுமக்கள் வெளியில் எங்கும் செல்லாததால் குறைந்த அளவிலான மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் சேவை மீண்டும் தொடக்கம்

நிவர் புயல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த மெட்ரோ ரயில் சேவை நேற்று முதல் மீண்டும் செயல்பட தொடங்கியது.சென்னையில் நிவர் புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நிறுத்தப்பட்டது. முன்னதாக காற்றின் வேகத்திற்கு ஏற்ப ரயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்தநிலையில், நிவர் புயல் கரையை கடந்ததையடுத்து நேற்று இயல்பு நிலை திரும்பியது. பேருந்து சேவை மற்றும் புறநகர் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கத்தொடங்கியது. இதனால், நேற்று மதியம் 12 மணி முதல் மெட்ரோ ரயில் சேவையும் மீண்டும் இயங்கத்தொடங்கியது. விடுமுறை நாள் அட்டவணையின் படி 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் என நேற்று இயக்கப்பட்டது. இதேபோல், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றியே பயணிகள் நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

Related Stories:

>