செய்யாறு அருகே அனப்பத்தூர் கிராமத்தின் அவலம் சாலைவசதி இல்லாததால் பெண் கொடுக்க மறுக்கும் மக்கள்

* இரவு நேரத்தில் ஆபத்தான பயணம்

* ஆம்புலன்ஸ் வர வழியின்றி தவிப்பு

செய்யாறு:  செய்யாறு அருகே அனப்பத்தூர் கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் பெண்கொடுக்க மறுக்கின்றனர். இரவு நேரத்தில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருவதாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வர வழியின்றி தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை குரல் எழுப்புகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த அனப்பத்தூர் கிராமத்தின் ஒருபகுதியான ஏரிக்கோடி குடியிருப்பு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு செல்ல அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் அமைந்துள்ள சாலையைத்தான் அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் அந்த ஏரி, பொதுப்பணித்துறை மூலம் ₹40 லட்சம் செலவில் குடிமராமத்து பணியாக கரையை பலப்படுத்துதல், மதகு சீரமைத்தல், கால்வாய் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

 இதில் கடந்த ஜூலை மாதம் ஏரிகரை பலப்படுத்தும் பணிக்காக கரைமீது மண் கொட்டப்பட்டது. அதில் கிராமத்திற்கு செல்லும் 2 கிலோமீட்டர் தொலைவு கொண்ட தார் சாலை முற்றிலும் தூர்ந்துபோனது. மண் கொட்டிவிட்டு, அதனை சமன் செய்யாமல் விட்டுவிட்டனர். இதனால் சாலை முழுவதும் இடைவிடாமல், மேடும், பள்ளமுமாக மாறியது. எனவே அவ்வழியாக கிராமத்திற்கு செல்லவோ, கிராமத்திலிருந்து வெளியே சென்று வரவோ கடந்த 3 மாதங்களாக அப்பகுதி மக்களுக்கு கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் சைக்கிள், பைக்குகளில் செல்லும் போது உயிரை கையில் பிடித்துக்கொண்டு சென்று வருகின்றனர். பணிக்கு சென்றுவிட்டு இரவுநேரங்களில் வீடுகளுக்கு திரும்பும்போது, தெரு விளக்குகளும் எரியாத நிலையில் மேடு பள்ளத்தில் விழுந்தெழுந்து ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

சாலையை சமன் செய்து தார்சலை அமைத்து, சாய்ந்து கிடக்கும் தெருவிளக்கு மின் கம்பங்களை சரிசெய்து கொடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால் வேலைக்கு செல்வோர், விவசாய பணிக்கு செல்வோரும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் உடல் நிலை பாதிக்கப்பட்டோரை இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வர வழியின்றி தவித்து வருகின்றனர். இறந்து போனவர்களின் சடலத்தை கொண்டு செல்லமுடியவில்லை. அறுவடை செய்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. அடுத்த பருவத்திற்கு பயிர் செய்ய வழி தெரியாமல் தவித்து வருவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி விவசாயிகள். அதுமட்டுமின்றி சாலை வசதி சரியில்லையென்று கிராமத்திலிருந்து பெண் எடுக்கவும், பெண் கொடுக்கவும் யாரும் முன்வருவதில்லை என்று கிராம மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் தற்போதுள்ள மழைக்காலத்தை கருத்தில் கொண்டு சாலை வசதியின்றி தவிக்கும் மக்களுக்கு சாலை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சாலை அமைப்பது ஊராட்சி நிர்வாகம் தான்

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘குடிமராமத்து பணியில் ஏரிக்கரை பலப்படுத்த கரையில் மண் கொட்டப்பட்டதால் ஏற்கனவே இருந்த தார் சாலை மறைந்து போனது. கரை பலப்படுத்தும் பணியானது இன்னும் முழுமையடையவில்லை தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.     விரைவில் பணி தொடங்கப்பட்டு சமன் செய்யப்படும். கரைமீது சாலை அமைக்கும் பணிக்கும் எங்களுக்கு சம்மந்தமில்லை. சாலை அமைப்பது குறித்து ஊராட்சி நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories:

>