×

வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு : கிலோ ரூ.10க்கு விற்பனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரிப்பால், விலை மீண்டும் சரிந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.  பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களில், ஜூலை மாதத்திலிருந்து பெய்த தென்மேற்கு பருவமழையால், விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை உழவு செய்து அதில் தக்காளி சாகுபடி செய்வதை தொடர்ந்தனர். இதில் பல கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்ட தக்காளி நல்ல விளைச்சலடைந்துள்ளதால் அதன் அறுவடை பணி கடந்த சில வாரத்திற்கு முன்பிருந்து துவங்கியது. இதனால்,  மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகமானது.  தற்போது, பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள தக்காளியின் அறுவடை தீவிரமாக உள்ளது.

இதனால், மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து நாளுக்கு நாள் அதிகமாகிறது. நேற்று மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.10க்கு விற்பனை செய்யப்பட்டது. மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் தக்காளிகளை, சில வியாபாரிகள் மேலும் குறைந்த விலைக்கு கேரள மாநிலத்துக்கு பெட்டியில் அடுக்கி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில வாரமாக தொடர்ந்து விலை சரிவால் வியாபாரிகளுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. மேலும், தக்காளி பறிக்க  கூட கூலி கட்டுப்படியாகாமலும், போதிய விலை இல்லாததாலும் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Tags : Increase in supply, tomatoes, prices, decline
× RELATED யானை தாக்கி விவசாயி பலி