×

பிராய்லர் கோழி குஞ்சுக்கு சாயம் பூசி நாட்டுக்கோழி என விற்பனை

கோவை: கோவையில் சாலையோரம் பிராய்லர் கோழி குஞ்சுக்கு கலர் சாயம் பூசி நாட்டுக்கோழி என விற்பனை செய்யும் கூட்டம் நடமாட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவை மதுக்கரை பாலக்காடு சாலை, அன்னூர் சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாமக்கல் பகுதிகளில் இருந்து வந்து சாலையோரம் கோழி குஞ்சுகளை விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள், தலைக்கு அடிக்கும் ‘டை’- மற்றும் அதனுடன் கலர் அழியாத வகையிலான ரசாயனத்தை பயன்படுத்தி பிராய்லர் கோழி குஞ்சுகளுக்கு வர்ணம் பூசி, நாட்டு கோழி குஞ்சுகள் போன்று மாற்றி விற்பனை செய்து வருகின்றனர்.  

இந்த குஞ்சுகளை குறைந்த விலைக்கு அவர்கள் விற்பனை செய்து வருவதால் பலர் அவர்களிடமிருந்து ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இந்த கோழி குஞ்சுகளை வாங்கி சென்று வளர்த்த ஒரு சில வாரங்களில் அது நாட்டு கோழி குஞ்சுகள் இல்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், “இது போன்ற கோழி குஞ்சுகளை இனம் கண்டறிவது கடினம். நாமக்கலில் பெண் குஞ்சுகளை வைத்துகொண்டு ஆண் குஞ்சுகளை அப்புறப்படுத்தி விடுவார்கள். இது போன்ற குஞ்சுகளை வாங்கி கொண்டு விற்பனை செய்கிறார்கள். இவை அனைத்தும் ஆண் குஞ்சுகளாகதான் இருக்கும். எனவே, சாலையோரம் கோழி குஞ்சுகளை வாங்கும் நபர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். பிராய்லர் கோழி குஞ்சுகளை வாங்கி ஏமாற வேண்டாம்” என்றனர்.

Tags : Broiler chicken, dyed, turkey, for sale
× RELATED ஜாதி சான்றிதழ் மோசடி வழக்கில்...