வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் சலோ போராட்டம் : ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டதால் போலீசார் தடியடி

டெல்லி : கொரோனா சூழலை பயன்படுத்திக் கொண்டு மோடி அரசு அவசர அவசரமாக நிறைவேற்றிய வேளாண் திருத்தச் சட்டங்களைக் கண்டித்து பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநில விவசாயிகள் கடந்த பல வாரங்களாக கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்க, அம்மாநிலத்திற்கான சரக்குப் போக்குவரத்தை நிறுத்தி அவர்களை பழிவாங்கத் துடித்தது மோடி அரசு. ஆயினும் வேளாண் மசோதாவை எதிர்ப்பதில் துளியும் தயக்கமின்றி முதல் நாள் முதல் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் போராடி வந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் மூன்று வேளாண் சட்டங்களுக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து இன்று டெல்லியை  இணைக்கும் ஐந்து நெடுஞ்சாலைகள் வழியாக டெல்லி சலோ பேரணிக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். இப்போராட்டம் நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. சண்டிகர்- டெல்லி நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்காக ஹரியாணா, பஞ்சாப் மாநில விவசாயிகள் தேசிய தலைநகருக்குச் செல்ல தங்கள் கிராமங்களிலிருந்து நேற்றே புறப்பட்டனர்.

இந்தநிலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு டெல்லி நோக்கி சென்றனர். அம்பாலாவில் திரண்ட விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.அப்போது தடுப்புகளை ஆற்றில் தள்ளியும், தடி மற்றும் கற்களை வீசியும் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து தண்ணீரை பீச்சியடித்தும், தடியடி நடத்தியும் அவர்களை போலீஸார் அங்கிருந்து விரட்டியடித்தனர்.

Related Stories:

>