×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 148 ஏரிகள் நிரம்பியது

காஞ்சிபுரம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் இறுதியில் தொடங்கி பரவலாக மழை பெய்தது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இந்நிலையில், நிவர் புயல் உருவாகி ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வையாவூர், நத்தப்பேட்டை, எறையூர் தேவனேரி, தாத்தனூர், குண்டு பெரும்பேடு, ஆரனேரி பெரிய ஏரி, நன்மங்கலம், புளிக்கொரடு இடும்பன் ஏரி, செம்பாக்கம் உள்ளிட்ட 70 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் கோலம்பாக்கம், எம்.என்.குப்பன் சித்தேரி, புக்கத்துரை பெரிய ஏரி, பட்டரைக் காலனி ஏரி உள்ளிட்ட 78 ஏரிகள் என மொத்தம் 148 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன.

இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 101, செங்கல்பட்டு மாவட்டத்தில் 153 என மொத்தம் 254 ஏரிகள் 75 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது. 152 ஏரிகள் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், 142 ஏரிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் என மொத்தம் 294 ஏரிகள் 50 சதவீத கொள்ளளவும், 241 ஏரிகள் 25 சதவீத கொள்ளளவையும் எட்டியுள்ளன. 40 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக கொள்ளளவில் உள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான 18 அடி ஆழம் கொண்ட தாமல் ஏரி 4 அடி மட்டுமே நீர் நிரம்பி உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட தென்னேரி ஏரி 15 அடி நீர் நிரம்பி உள்ளது.

20 அடி கொள்ளவு கொண்ட உத்திரமேரூர் பெரிய ஏரி 6 அடியும், 18 அடி கொள்ளளவு கொண்ட ஸ்ரீபெரும்புதூர் ஏரி 15.60 அடியும், 18.60 அடி கொள்ளளவு கொண்ட மணிமங்கலம் ஏரி15.60 அடியும் நீர் நிரம்பி உள்ளதாக பொதுப்பணித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை 23.30 அடி கொள்ளளவு கொண்ட மதுராந்தகம் 16.11 அடி நீர் நிரம்பி உள்ளது. 16.11 அடி கொள்ளளவு கொண்ட கொண்டங்கி ஏரி 13 அடியும், 15.30 அடி கொள்ளளவு கொண்ட பொன்விளைந்த களத்தூர் ஏரி 11.60 அடியும், 16 அடி கொள்ளளவு கொண்ட கொளவாய் ஏரி 12.90 அடி நிரம்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : lakes ,Kanchipuram district , 148 lakes, Kanchipuram district
× RELATED பெருங்கோழி கிராமத்தில் அரசு நேரடி...