×

திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் பகுதி் முகாம்களில் 1000 பேர் தஞ்சம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000க்கும் மேற்பட்டோர் புயல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருக்கழுக்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், வாயலூர், கொத்தி மங்கலம், எடையூர், சாலூர், வெங்கப்பாக்கம், விட்டிலாபுரம் ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட கிராமகளில் தாழ்வான மற்றும் குடிசை வீடுகளில் வசிப்பவர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு நலன் கருதி அந்தந்த பகுதிகளிலுள்ள புயல் பாதுகாப்பு மையம் மற்றும் திருமண மண்டபங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் இருளர்கள் 34 பேர் திருக்கழுக்குன்றம் அரசுப் மேல்நிலைப் பள்ளியிலும் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

புயலால் மரங்கள் சாய்ந்தால் அவைகளை அப்புறப்படுத்த அந்தந்த பகுதிகளில் பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்டவை தேவையான உபகரணங்கள் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நேற்று  அதிகாலை முதல் தொடர்ந்து அதிகளவில் கன மழை பெய்து வருவதால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் புதிதாக கட்டப்பட்ட வாயலூர் மற்றும் வல்லிபுரம் பாலாற்று தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. மேலும் கல்பாக்கம் மற்றும் புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம், உள்ளிட்ட கடல் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகளவில் உள்ளது. அதேப்போல் திருக்கழுக்குன்றம் தாலுகாவில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 97 ஏரிகளும், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 74 சிறு பாசன ஏரிகள் மற்றும் 391 குளங்கள் ஆகியவைகள்  நிரம்பியுள்ளன.  அதிக  நீர் வரத்து காரணமாக ஏரிகளின் கரைகள் உடைபட்டால்  உடனடியாக சரி செய்ய மண் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளது. ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே சிவந்தாங்கல் பகுதியில் ஓடையினை ஒட்டி தாழ்வான பகுதியில் சுமார் 14 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

இந்நிலையில் நிவர் புயல் உருவாகி ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த 14 குடும்பங்களை அப்புறப்படுத்தி சிவந்தாங்கல் பகுதியில் உள்ள அரசினர் பள்ளியில் தங்க வைக்கபட்டுள்ளனர். இதேபோல் குன்றத்தூர் ஒன்றியம் செரப்பண்ஞ்சேரி ஊராட்சி ஆரம்பாக்கம் பகுதியில் தாழ்வான பகுதியில் தங்கியிருந்த 100 குடும்பங்களை அப்புறப்படுத்தி ஆத்தனஞ்சேரி பகுதியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் நிவர் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகள் மற்றும் மழைநீரால் பாதிக்கப்படும் பகுதி மக்களின் பாதுகாப்பிற்காக உத்திரமேரூர் அருகே கருவேப்பம்பூண்டி, வாடாதவூர், திருமுக்கூடல், ஒரக்காட்டுப்பேட்டை, சாலவாக்கம், தோட்டநாவல், உத்திரமேரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி என 7 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஒரகாட்டுப்பேட்டை, திருமுக்கூடல், தோட்டநாவல், ஆதவப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மையங்களில் தங்குவோருக்கு உணவு, குடிநீர் போர்வை, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.


Tags : camps ,areas ,Kalpakkam , 1000 people took refuge in the camps in Thirukkalukkunram and Kalpakkam areas
× RELATED 88 முகாம்களில் நடக்கிறது 10ம் வகுப்பு...