ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து நிறுத்தம்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை -  திருவள்ளுர் நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றின் குறுக்கே 14.10.1928ம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்தை ஆந்திர மாநிலம் திருப்பதி, புத்தூர், காளஹஸ்தி, ரேணிகுன்டா ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கனரக வாகனங்கள் மற்றும் பெரியபாளையம், தண்டலம், பாலவாக்கம், தாராட்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த அரசு, தனியார் கம்பெனி ஊழியர்களும் பொது மக்களும்  ஊத்துக்கோட்டை வந்து இந்த தரைப்பாலத்தை கடந்து தான் மாவட்ட தலைநகரான திருவள்ளுர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டும். மேலும் ஊத்துக்கோட்டையை சுற்றியுள்ள அனந்தேரி, போந்தவாக்கம், சீத்தஞ்சேரி, பென்னலூர்பேட்டை உள்ளிட்ட 50 கிராம மக்கள் தங்களின் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊத்துக்கோட்டைக்கு தான் வர வேண்டும். கடந்த 2015ம் ஆண்டு நவம்பர், டிசம்பரில் பெய்த மழையால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நிரம்பி திறக்கப்பட்டதால் ஆரணி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டு ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மூழ்கி 50 கிராம மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதனால் 33 நாட்கள் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  இதனால் திருவள்ளூர், ஆவடி, அம்பத்தூர், ஸ்ரீபெருமந்தூர் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் பெரியபாளையம், வெங்கல் வழியாக 40 கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டு வேலைக்கு சென்றனர். இந்நிலையில், நிவர் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் ஏரி நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நாகலாபுரம், நந்தனம், சுருட்டபள்ளி வழியாக ஊத்துக்கோட்டையை அடைந்து பின்னர் சிட்ரபாக்கம் தடுப்பணை நிரம்பி பெரியபாளையம், பொன்னேரி வழியாக பழவேற்காடு கடலில் கலக்கும். ஆரணியாற்றில் தண்ணீர் வரத்தால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், பிச்சாட்டூர் ஏரி திறப்பால் ஊத்துக்கோட்டை தரைப்பாலம் மூழ்கும் சூழ்நிலை இருப்பதால் ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஆரணியாற்றின் தற்காலிக பாலத்தில் சேதமடைந்துள்ளது. இதை ஊத்துக்கோட்டை தாசில்தார் தேவி, டிஎஸ்பி சாரதி ஆகியோர் பார்வையிட்டனர்.

Related Stories:

>