×

நிவர் புயலால் விடிய விடிய விடாமல் பெய்கிறது கனமழையால் வெள்ளக்காடானது சென்னை: வீடுகளுக்குள் முடங்கிய பொதுமக்கள்: சாலைகளில் வெள்ளப்பெருக்கு: தாழ்வான பகுதி வீடுகளில் புகுந்த மழைநீர்

சென்னை: சென்னையில் 3வது நாளாக விடிய விடிய விடாமல் பெய்த கனமழையால் சென்னையே வெள்ளக்காடானது. சென்னையை புரட்டி போட்ட நிவர் புயலால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிவிட்டனர். சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் தேங்கும் நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் பாதிக்கப்பட்ட மக்கள் பரிதவித்து வருகின்றனர்.  நிவர் புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.  குறிப்பாக சென்னையில் நேற்று முன்தினம் முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி சாலைகளே தெரியாத அளவுக்கு மூழ்கிவிட்டது. எல்லா பக்கமும் தண்ணீர் தேங்கி வருவதால் சென்னையே மிதக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

நேற்று புயல் கரையை கடந்ததால் விடாமல் கனமழை பெய்தது. இதனால் வெள்ளக்காடாகி 2வது நாளாக சென்னை மிதக்கிறது. தேங்கிய மழைநீர் வெளியே செல்ல முடியாததால் பல இடங்களில் குளம் போன்று காட்சியளிக்கிறது. இதனால் சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி விட்டது.  புயல் தமிழகத்தை நெருங்கி வரும் போது  சூறைக்காற்றுடன் கூடிய தீவிர கனமழை சென்னையில் பெய்தது.
இதனால் சென்னையில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மழை பெய்தது. ஏராளமான தெருக்களில் முட்டியளவுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அவசர வேலையாக மக்கள் வெளியில் வர நினைத்தால் கூட வர முடியாத நிலை ஏற்பட்டது. தி.நகர், வளசரவாக்கம், திருவான்மியூர், வடபழனி, அண்ணாசாலை, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. கிண்டி, கே.கே.நகர், அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், வண்டலூர், பெருங்களத்தூர் பகுதிகளில் மழை இரவு முழுக்க வெளுத்தெடுத்தது.  இந்த பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது.

குரோம்பேட்டை, நுங்கம்பாக்கம், சோழிங்கநல்லூர், செங்கல்பட்டு, தாம்பரம், கிண்டி, பல்லாவரம், வடபழனி  உள்ளிட்ட சென்னை மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளை மழை புரட்டி எடுத்தது. தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் ஆறு போல தண்ணீர் தேங்கி உள்ளது. சில பகுதிகளில் மழைநீர் அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல் உயரத்துக்கு புகுந்துவிட்டது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள்  பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் வாகனங்கள் எல்லாம் நீரில் மூழ்கும்  நிலை உருவாகியது. எனவே தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மோட்டார் மூலம்  உடனுக்குடன் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது  பொதுமக்களின் குமுறலாக உள்ளது.  வேளச்சேரி வெள்ளம் போல காட்சி அளிக்கிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டாலும் மழைநீர் வடிய வழி இல்லாததால் சென்னை மற்றும் புறநகரில் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்களும் விழுந்துள்ளது. முக்கிய சாலையில் 26க்கும் அதிகமான மரங்கள் விழுந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி விட்டது.

ராயபுரம், தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் 3 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அசோக் நகர் 11வது அவென்யூவில் சுமார் 40 அடி மரம் வேரோடு சாலையில் சாய்ந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  தொடர் மழையால் தாழ்வான இடங்களில் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. வடசென்னையில் தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால், மீண்டும் மீண்டும் தண்ணீர் தேங்கி வருகிறது. நேற்று புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. மரங்கள் எப்போது விழும் என்று சொல்ல முடியாது என்பதால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் ஒரு வித பீதியுடனே சென்றனர்.

சூறைக்காற்றில் மரம் முறிந்து விழுந்ததில் 50 வயது நபர் பலி
நிவர் புயல் சூறைக்காற்றால் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் நடந்து சென்ற 50 வயது நபர் உடல் நசுங்கி உயிரிழந்தார். வங்கக்கடலில் உருவாகி உள்ள ‘நிவர்’ புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் சூறைக்காற்றுடன் கன மழை  பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. அந்த வகையில் திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள பள்ளி அருகே நேற்று மதியம் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடந்து சென்றார். அப்போது திடீரென பயங்கர வேகத்தில் மழையுடன் சூறைக்காற்று வீசியது.

இதில் மரம் முறிந்து சாலையில் நடந்து ெசன்ற 50 வயது நபர் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதை நேரில் பார்த்த பொதுமக்கள் உயிருக்கு போராடிய நபரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது ேநரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  இதுகுறித்து ஐஸ் அவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.


நோய் தொற்றை தடுக்க 1000 குழுக்கள்
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது: நிவர் புயல் வந்து சென்றப்பின் மருத்துவ பரிசோதனை செய்வதற்காக டாக்டர்கள் தலைமையில் பல்வேறு மருத்துவ பணியாளர்கள் அடங்கிய 1000 குழு அமைக்கப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். இவர்கள், மழைநீர் தேங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பரிசோதிக்க உள்ளனர். அப்போது, கொரோனா, டெங்கு போன்ற தொற்று அறிகுறி உள்ள நபர்களை தனிமைப்படுத்தி, ஆர்டிபிசிஆர் கருவி வாயிலாக பரிசோதனை நடத்தப்படும். மேலும் தொற்று நோய்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படாத வகையில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அடையாற்றை ஒட்டிய மக்கள் முகாம்களுக்கு செல்ல வேண்டும்
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வெளியிட்ட அறிக்கை: செம்பரம்பாக்கம் ஏரியின் மிகைநீர் நேற்று நண்பகல் 12 மணி அளவில் சுமார் 1,000 கன அடி அளவிற்கு வெளியேற்றப்பட்டது. இதனால், கானு நகர், சூளைப்பள்ளம், திடீர் நகர், அம்மன் நகர், பர்மா காலனி, ஜாபர்கான் பேட்டை, கோட்டூர்புரம், சித்ரா நகர் மற்றும் அடையாறு ஆற்றை ஒட்டிய தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் அருகில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சியின் நிவாரண மையங்களுக்கு செல்ல வேண்டும்.

சென்னையில் 169 முகாம்கள் தயார்
அடையாறு கரை ஓரத்தில் உள்ள 500க்கு மேற்பட்டவர்கள் நிவாரண முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உணவு, அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சென்னை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது. இந்த நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு கொரோனா அறிகுறி சோதனையும் செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை சென்னையில் 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.

சென்னையில் 90 மரங்கள் விழுந்தன
சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னையில் அதிக வேகத்தில் வீசிய காற்றால் 90க்கு மேற்பட்ட மரங்கள் விழுந்தன. நிவர் புயல் நேற்று இரவு கரையை கடந்தது. இதனால், சென்னையின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் அதிக வேகத்தில் காற்று வீசியது. 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால் சென்னையின் பல்வேறு இடங்களில் மரங்கள் விழுந்தன. இதன்படி நேற்று மற்றும் நேற்று முன்தினம் சென்னையில் 90 க்கு மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தன.



Tags : Chennai ,floods , Chennai by storm inundated by heavy snowing nivar from dawn to dawn: the passivity of public houses, flooded roads: lowland rain water entered the houses
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...