×

ஆளுங்கட்சியினர் அடிக்கும் கொள்ளைக்கு பாஜ அரசு துணை போகிறது மந்திரவாதியை போல ஷோ காட்ட வடமாநிலம் அல்ல தமிழ்நாடு: அமித்ஷாவுக்கு மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை:  திருநெல்வேலி- தென்காசி மாவட்ட திமுக சார்பில் ‘தமிழகம் மீட்போம்-2021’ சட்டமன்ற தேர்தல் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று காணொலி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில், நெல்லை கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்டப் பொறுப்பாளர் அப்துல் வகாப், தென்காசி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் சிவபத்மநாதன், தென்காசி  வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் வக்கீல் துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு தலைமை வகித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்தத் தமிழின விரோத அரசியல் கூட்டத்துக்கு பாடம் கற்பித்தாக வேண்டிய கடமை இந்தத் தேர்தலில் தமிழக மக்களுக்கு இருக்கிறது. கடந்த 22ம் தேதி சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பேச்சை நான் பத்திரிகைகளில் படித்தேன். மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் - திமுக கூட்டணி என்ன சாதனைகள் செய்தது? அதனை பட்டியல் போடத் தயாரா என்று அமித்ஷா கேட்கிறார். அவர் இந்தியாவில்தான் இருந்தாரா? அல்லது பாஜ ஆட்சி வந்த பிறகு வேற்று கிரகத்தில் இருந்து குதித்தாரா என்று தெரியவில்லை.

இதை எந்த விழாவில் கேட்கிறார் என்றால் மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டப் பணிகள் தொடக்க விழாவில் தான் கேட்கிறார் அமித்ஷா. ஐயோ பாவம். அவருக்காகப் பரிதாபப்படுகிறேன். மெட்ரோ ரயில் முதலாம் கட்டப் பணிகளைத் தொடங்கியதே திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தான். திமுக அங்கம் வகித்த காங்கிரசு கூட்டணி ஆட்சியில் தமிழகத்துக்கு என்ன நன்மைகள் எல்லாம் செய்துள்ளோம் என்பதை நான் பட்டியல் போட ஆரம்பித்தால், இன்று முழுவதும் பட்டியல் போடலாம். தமிழகத்துக்கு என்ன நன்மை செய்தீர்கள் என்று பணிவோடு கேட்பதாக அமித்ஷா சொல்லி இருக்கிறார். அவருக்கு நானும் பணிவோடு பதில் சொல்ல விரும்புகிறேன்.   அமித்ஷாவுக்கு முதலில் திமுக  என்றால் என்ன மாதிரியான அரசியல் கட்சி என்பதே தெரியவில்லை. 70 ஆண்டு இயக்கம் இது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலை அலங்கரித்த இயக்கம் இது. ஒரு முறையல்ல, ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட இயக்கம் இது. தமிழக சட்டமன்றத்தில் 100 உறுப்பினர்களைக் கொண்ட இயக்கம் இது. நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி இது.அது எதுவும் தெரியாமல், ஏதோ மந்திரவாதியைப் போல ஒரு நாளில் என்ன செய்கிறேன் பார் என்று ஷோ காண்பிக்க, இது வட மாநிலம் அல்ல. இது தமிழ்நாடு என்பதை, திமுக தொண்டனாக அமித்ஷாவுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.  வலது பக்கம் உட்கார்ந்து இருக்கும் பழனிசாமி, ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். இடது பக்கம் உட்கார்ந்திருக்கும் பன்னீர்செல்வம், சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர். இவர்களை வைத்துக் கொண்டு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு அமித்ஷாவுக்கு என்ன அருகதை இருக்கிறது?  பழனிசாமியும், பன்னீர்செல்வமும் அடித்த கொள்ளைக்கு மத்திய பாஜ அரசு துணை போகிறது என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்ட விரும்புகிறேன்.

ஆனால், இந்தக் கொள்ளைக் கூட்டத்துக்கும், அவர்களைக் காப்பாற்றும் பா.ஜ.க.வுக்கும் பாடம் புகட்ட தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். மு.க.ஸ்டாலினாகிய என்னை அரசியல் வாரிசு என்று அமித்ஷா சொல்வாரானால், ஆம் நான் அரசியல் வாரிசு தான். நான் கலைஞரின் மகன். இதை விட எனக்கு வேறு பெருமை தேவையில்லை.  நான் அவரது ரத்த வாரிசு மட்டுமல்ல, கொள்கை வாரிசு. முத்தமிழறிஞர் கலைஞரின் கொள்கைக்கு, கோட்பாட்டுக்கு லட்சியத்துக்கு வாரிசு. ஆமாம், திமுகவில் வாரிசு அரசியல் தான் நடக்கிறது. தந்தைப் பெரியாரின் கொள்கைக்கு வாரிசு நாங்கள். பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு வாரிசு நாங்கள். திராவிட இயக்கத்தின் வாரிசு நாங்கள்.

 100 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ச்சமுதாயத்தின் விடியலுக்காக சமூகநீதியை உருவாக்கிய நீதிக்கட்சியின் வாரிசு நாங்கள். நாங்கள் அனைவரும், ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசுகள். அதனால்தான் அமித்ஷாவுக்கு எங்களைப் பார்த்தால் கோபம் வருகிறது. இந்த யுத்தம் இன்று நேற்று தொடங்கிய யுத்தம் அல்ல. பல நூறு ஆண்டுகளாக நடக்கும் யுத்தம். எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் தடுக்க முடியாது.

Tags : BJP ,government ,party , BJP government is going to support the looting by the ruling party Tamil Nadu is not a northern state to show like a magician: MK Stalin's answer to Amit Shah
× RELATED 11 வங்கி கணக்குகளை முடக்கியதோடு...