×

22 அடியை எட்டியதால் செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு: 7000 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்: அடையாறில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி 22 அடியை எட்டியதை தொடர்ந்து பாதுகாப்பு கருதி 7 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து, அடையாற்று கரையை ஓட்டி தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து கரையோரப்பகுதிகளை கண்காணிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.  செம்பரம்பாக்கம் ஏரி  கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழை காரணமாக நிரம்பியதால், இரவோடு, இரவாக 30 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, அடையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கானோர் உைடமைகளை இழந்தனர். பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனால், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தாலே பொதுமக்கள் பலரும் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடுவார்களோ என்கிற அச்சம் அவர்கள் மத்தியில் உள்ளது. இந்த சூழலில் நிவர் புயல் காரணமாக பெய்து வரும் மழையால், செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பியது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி 24 அடி கொள்ளளவு கொண்டஇந்த ஏரியின் நீர் மட்டம் 21.55 அடியாக எட்டியது. 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் 2999 மில்லியன் கன அடியாக இருந்தது. இந்த ஏரிக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி 1096 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தொடர்ந்து பெய்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 4027 கன அடி வீதம் நீர் வந்தது.

இதையடுத்து பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் ஏரி நேற்று பிற்பகல் 12 மணியளவில் 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதாக பொதுப்பணித்துறை அறிவித்தது. மேலும், நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர்வெளியேற்றம் உயர்த்தப்படும் என்பதால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை சார்பில், மாநகராட்சிக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் வேண்டுகோள் விடுத்தது. இதை தொடர்ந்து, அடையாற்றை ஓட்டி வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் அடையாற்றை ஒட்டியுள்ள சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், ஈக்காட்டு தாங்கல், மணப்பாக்கம், அனகாபுத்தூர், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அவர்கள் மாநகராட்சிபள்ளி, சமூக நலக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதே போன்று மணப்பாக்கம், திருநீர்மலை, அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.இந்த நிலையில் ஏரியின் பாதுகாப்பு கருதி முதற்கட்டமாக நேற்று பிற்பகல் 12 மணிக்கு வினாடிக்கு 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டன. அப்போது 3 முறை சைரன் ஒலி எழுப்பப்பட்டன. தொடர்ந்து பிற்பகல் 2 மணிக்கு 1,500 கன அடியும், மாலை 4.30 மணி நிலவரப்படி 3 ஆயிரம் கனஅடியாகவும், தொடர்ந்து, நேற்று மாலை 6 மணியளவில் அதிகபட்சமாக 5 ஆயிரம் கன அடி என படிப்படியாக தண்ணீர் திறக்கப்பட்டன.

தொடர்ந்து ஏரிக்கு நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 4980 கன அடி வரை வந்து கொண்டிருந்தது. 24 அடியாக இருந்த ஏரியின் நீர்மட்டம் 21.98 ஆக இருந்தது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்று இரவு 8 மணி நிலவரப்படி 6500 கன அடியாக ஏரிக்கு நீர் வரத்து இருந்தது. இதனால், ஏரியின் நீர்மட்டம் 22.02 அடியாக உயர்ந்தது. இதனால், நேற்று இரவு 8.30 மணியளவில் ஏரியில் இருந்து 7 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டன. தொடர்ந்து ஏரிக்கு வரும் நீர்வரத்துக்கேற்ப தண்ணீர் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், அடையாற்றில் 50 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் செல்ல வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை என்றும், இருப்பினும் பாதுகாப்பாக இருப்பது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அடையாற்றில் 120 ஏரிகளில் இருந்து உபரி நீர் வருவதாலும், மணப்பாக்கம், திருநீர்மலை, ஈக்காட்டுதாங்கல், கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாய்க்கால்வாய்களில் இருந்து வரும் உபரி நீர் காரணமாக 15 ஆயிரம் கன அடி வரை அடையாற்றில் தண்ணீர் சென்றன. இந்த நிலையில் 10 ஆயிரம் கனஅடி நீர் வரை திறந்து விட்டால் பிரச்னை இருக்காது என்பதால் தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நவம்பர் 25ம் தேதி (நேற்று) காலை முதல் இன்று காலை 6 மணி வரை செம்பரம்பாக்கம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் 20 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக மத்திய நீர்த்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் உபரி நீரை அப்படியே திருப்பி விடும் நிலை உள்ளதால், அதிகபட்ச உபரி நீர் திறக்க வாய்ப்புள்ளது.

எனவே, தலைமை பொறியாளர் அசோகன், கண்காணிப்பு பொறியாளர் முத்தையா தலைமையிலான பொறியாளர்கள் குழுவினர் செம்பரம்பாக்கம் ஏரியை கண்காணிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் பொறியாளர்கள் 24 மணி நேரமும் ஏரியின் நீர்வரத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.மேலும், அடையாற்றில் கரையோர பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அடையாற்று முகத்துவாரம் பகுதிகளில் தண்ணீர் செல்ல வசதியாக தூர்வாரும் பணி தொடர்ந்து மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் கடைசியாக கடந்த 2015ம் ஆண்டு தான் 30 ஆயிரம் கனஅடி தன்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தான் தண்ணீர் திறக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2 மணி நேரத்திற்கு ஒரு முறை ஆய்வு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்தை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக உபரி நீர் திறந்து விடலாமா என்பது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, ஏரிக்கு நீர் வரத்து அதிகமாக இருந்தால் தண்ணீர் திறக்கலாம் என்றும், குறைவாக இருந்தால் அதற்கேற்ப தண்ணீர் திறப்பது குறித்து அவ்வப்போது முடிவு செய்தனர். சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கவனத்தில் கொள்ள வேண்டியிருப்பதால், அதற்கேற்ப ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், அதிக மழைப் பொழிவு ஏற்படும் காரணத்தால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. பெரும்புதூர், தாம்பரம் மற்றும் சென்னை மாநகர் பகுதிகளில் ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்களுக்கு உரிய எச்சரிக்கை வழங்க வேண்டும். சென்னை விமான நிலைய அதிகாரிகள் அடையாறு ஆற்றின் ஓரம் இருக்கும் விமான ஓடுபாதைகள் அருகே கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரவு திறப்பதை தடுத்த அதிகாரிகள்
கடந்த 2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் இரவோடு, இரவாக 30 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. அந்த சமயத்தில் கடலின் நீர் மட்டம் அதாவது ஹை டைட் (high tide) நிலை காரணமாக கடல் அலை மேலே எழும்பும். இந்த மாதிரியான சூழலில் முகத்துவாரம் வழியாக தண்ணீர் எளிதாக செல்ல முடியாது. எனவே, மக்கள் நலன் கருதி பகல், மாலை நேரங்களில் அதிக அளவில் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மூத்த அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். இதையேற்று, நேற்று பகல் நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டன. மேலும், மாலை நேரத்தில் 10 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டன. இதனால் பகல், மாலை நேரங்களில் தண்ணீர் திறக்கப்பட்டு முகத்துவாரத்தை அந்த நீர் அடைந்தது. இதன் மூலம், இரவு நேரத்தில், அதிகளவில் தண்ணீர் திறப்பதை முன்கூட்டியே தடுக்க நடவடிக்கை எடுத்ததன் விளைவாக அடையாற்றில் எந்தவித பிரச்சனையும் இன்றி தண்ணீர் சென்றன.

இரவில் ஏரியில் தங்கிய அதிகாரிகள்
செம்பரம்பாக்கம் ஏரி 22 அடி எட்டியதை தொடர்ந்து, அங்கிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மழை காரணமாக ஏரிக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்தது. இதனால், கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டிய அவசியம் ஏற்படும் சூழலில் உயர் அதிகாரிகளின் உத்தரவுக்கு காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, செம்பரம்பாக்கம் ஏரியின் நிலையை கண்காணிக்க முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டார். இதனால், அதிகாரிகள் செம்பரம்பாக்கம் ஏரியில் அலுவலகத்திலேயே தங்கினார்கள். தொடர்ந்து, அங்கிருந்தபடியே ஏரிக்கு வரும் நீர்வரத்தை கண்காணித்தபடி இருந்தனர்.

Tags : opening ,Sembarambakkam Lake ,flooding ,Adyar , Sembarambakkam Lake opening as it reaches 22 feet: 7000 cubic feet of water discharge: Adyar floods
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா