மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும்போது மக்களுக்காக செயல்படும் அரசு மதுக்கடையை மூடி விடலாமே? ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை:  மக்களுக்காக அரசு செயல்படும் போது, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் டாஸ்மாக் கடைகளை மூடிவிடலாமே என நீதிபதிகள் கூறியுள்ளனர்.  மதுரை மாவட்டம் பி.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கண்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்தில் சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதுவரை டாஸ்மாக் மதுக்கடை இல்லை. பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் நலன் கருதி இதுவரை மதுபானக் கடையை நாங்கள் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் பேருந்து நிறுத்தம் அருகே டாஸ்மாக் மதுக்கடையை புதிதாக திறக்க முயற்சித்தனர். அந்த இடம், அரசு மேல்நிலைப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, சர்க்கரை ஆலை மற்றும் குடியிருப்புகள் நிறைந்த நெடுஞ்சாலைப் பகுதியாகும்.

இதற்கு பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க மாட்டோம் என அதிகாரிகள் வாய்மொழியாக உறுதியளித்தனர். தற்போது அந்தப் பகுதியில் திறந்துள்ளனர். இதனால், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உண்டாகும். குற்ற செயல்கள் நடக்கும். எனவே, எங்கள் கிராமத்தில் திறந்த டாஸ்மாக் மதுபானக் கடை மூடுமாறு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். டாஸ்மாக் வக்கீல் ஆறுமுகம் ஆஜராகி, ‘தற்காலிகமாக திறக்கப்பட்ட கடை பொதுமக்களின் ஆட்சேபத்தால் மூடப்பட்டது’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘மக்களுக்காகத் தான் அரசு செயல்படுகிறது என்கிற போது,  டாஸ்மாக் திறக்க வேண்டாமென பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மூடி விடலாமே’’ என்றனர். பின்னர் மனு மீதான விசாரணையை அடுத்த வாரம் தள்ளி வைத்தனர்.

Related Stories:

>