புதுவையில் சூறாவளி காற்றுடன் கனமழை: கடைகள் அடைப்பு: கடற்கரை சாலைக்கு சீல்

புதுச்சேரி: புதுச்சேரியில் நிவர் புயலையொட்டி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கடைகள், தொழிற்சாலைகள் அடைப்பால் ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நிவர் புயலையொட்டி புதுச்சேரி கடல் நேற்று அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. பல அடி உயரத்துக்கு அலை வீசியது. கடற்கரை சாலைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.  கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தன. அரசு உத்தரவின் பேரில் கடைகள், தொழிற்சாலைகள், நிறுவனங்கள் அனைத்தும் நேற்று மூடப்பட்டன. புதுச்சேரியில் 196 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. காற்றின் வேகம் அதிகரித்தால் மின்விநியோகம் நிறுத்தப்படும் எனவும், தலைமை மின்துறை அலுவலகத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதாகவும் மின்துறை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என முதல்வர் நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

புயலையொட்டி நேற்று முன்தினம் முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று, காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கடைகள், தொழில் நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் ஆட்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. பேருந்து, ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. கடலோர பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்கும்படி போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தினர். மேலும், கடலோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

வீராம்பட்டினம் கடற்கரையோரம் இருந்த 200 படகுகள் கிரேன் மூலம் மேடான பகுதிக்கு தூக்கி வைக்கப்பட்டன. அங்குள்ள  புயலையொட்டி புதுச்சேரி துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நேற்று காலை ஏற்றப்பட்டது.

பேரிடர் மீட்பு படையினர், வருவாய் உள்ளிட்ட துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே மரங்கள், பேனர்கள் சாலையில் விழுந்தன. அவற்றை மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் அகற்றினர்.

Related Stories:

>