ஊரடங்கை அறிவிப்பதாக இருந்தால் அனுமதி பெற வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களுக்கு வெளியே ஊரடங்கை அறிவிக்கும் முன்பாக மத்திய அரசுடன் மாநில அரசுகள் ஆலோசிக்க வேண்டுமென உள்துறை அமைச்சகம் புது உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், பண்டிகை காலம் மற்றும் குளிர் காலம் காரணமாக வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்கள் முக்கிய நகரங்களில் பகுதி நேர மற்றும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இந்நிலையில், டிசம்பர் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதில் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தி, வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வேண்டுமெனவும் மாநில அதிகாரிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய் தொற்றுள்ளோர் எண்ணிக்கையை குறைப்பதில் கவனம் செலுத்தவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், ‘உள்ளூர் நிலமையை பொறுத்து பகுதி நேர ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை மாநில அரசுகள் அமல்படுத்தலாம். கட்டுப்பாடு மண்டலங்களுக்கு வெளியே ஊரடங்கை அமல்படுத்துவதாக இருந்தால், அது தொடர்பாக மத்திய அரசிடம் முன்கூட்டியே ஆலோசித்து அனுமதியை பெற வேண்டும்,’ எனவும் மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ கல்லூரி டிச.1ம் தேதி திறப்பு

மத்திய சுகாதார துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், ‘டிசம்பர் 1ம் தேதியோ அதற்கு முன்பாகவோ மருத்துவ கல்லூரிகளை திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிகள் திறக்கப்பட்ட பிறகு, பரிந்துரைக்கப்பட்ட சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் கல்லூரிகளிடம் கருத்து கேட்டு, டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பாக கல்லூரிகளை திறக்க வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. அதைத் தொடர்ந்து மத்திய அரசு இத்தகைய உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>