தூதரக பார்சலில் தங்கம் கடத்த சிவசங்கர் ஊக்கமும், உதவிகளும் செய்தார்: சுங்க இலாகாவிடம் சொப்னா வாக்குமூலம்

திருவனந்தபுரம்: ‘தூதரக  பார்சலில் தங்கம் கடத்துவற்கு ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர் ஊக்கம் அளித்து, உதவிகளையும் செய்தார்,’ என சுங்க இலாகாவிடம் சொப்னா வாக்குமூலம் கொடுத்துள்ளார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய  அரபு அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்திய வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயனின்  முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கரை நேற்று முன்தினம் சுங்க இலாகாவும்  கைது ெசய்தது. இந்த வழக்கில் சிவசங்கர் 23வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு  உள்ளார். அமலாக்கத் துறையும் இவரை ஏற்கனவே கைது செய்துள்ளது. அதன் வழக்கில் அவர் 5வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த 10ம் தேதி அமலாக்கத் துறையினரும், 18ம் தேதி சுங்க  இலாகாவும் சொப்னாவிடம் சிறையில் வைத்து விசாரணை நடத்தின. சுங்க இலாகா  சட்டம் 108வது பிரிவின் கீழ் சொப்னா வாக்குமூலம் அளித்தார்.

இந்த பிரிவின்  கீழ் வாக்குமூலம் கொடுத்தால் பின்னர் அதை மாற்ற முடியாது. இந்த  வாக்குமூலத்தில் தூதரக பார்சலில் தங்கம் கடத்துவதற்கு சிவசங்கர் ஊக்கமும் அளித்து, உதவிகளையும் செய்தார் என்று ெசாப்னா கூறியுள்ளார். இது, சிவசங்கருக்கு மேலும்  சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே, ‘இந்த வழக்கில் கேரள முதல்வர் முதல்வர் பினராய் விஜயனை சிக்கவைக்க விசாரணை அமைப்புகள் முயற்சிக்கின்றன,’ என்று சொப்னா கூறியதாக  வெளியான ஆடியோ தொடர்பாக, மத்திய உளவுத்துறையும் (ஐபி), கேரள  குற்றப்பிரிவு போலீசாரும் விசாரணையில் இறங்கி உள்ளனர். சொப்னாவின்  ஆடியோவில் அவரது குரல் மட்டுமின்றி, அவரது பேச்சை ஆமோதிக்கும் இன்னொரு  குரலும் கேட்கிறது. அந்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடந்து  வருகிறது.

அது ஆண் குரல்போல் இருந்தாலும், பெண்ணின் குரலாகவும்  இருக்க வாய்ப்பு உள்ளது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. சிறையில் வைத்து  அந்த ஆடியோ பதிவு செய்யப்படவில்லை என்று சிறைத்துறை டிஜிபி  தெரிவித்திருந்தார். அப்படியானால் நீதிமன்றத்துக்கோ அல்லது மருத்துவ  பரிசோதனைக்கோ செல்லும்போது வாகனத்தில் வைத்து இதை பதிவு செய்திருக்கலாம்  என்று கருதப்படுகிறது.

அமலாக்கத்துறை நோட்டீஸ் தந்ததும் மீணடும் அட்மிட் ஆன தனி செயலர்

கேரள முதல்வர் பினராய் விஜயனின் கூடுதல் தனிச் செயலாளர் ரவீந்திரனுக்கும் தங்கம் கடத்தல் வழக்கு ரகசியங்கள் தெரியும் என சிவசங்கர் கூறியதால், ரவீந்திரனை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை இம்மாதம் ஆரம்பத்தில் நோட்டீஸ் கொடுத்தது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால், விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. அவர், சமீபத்தில் குணமடைந்து வீடு திரும்பியதால், கொச்சியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் நாளை ஆஜராகும்படி  நேற்று நோட்டீஸ் ெகாடுக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை திடீரென அவர், கொரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்தார். விசாரணையில் இருந்து தப்பிக்கவே இவர் இவ்வாறு செய்வதாக சந்தேகிக்கப்படுகிறது.

Related Stories:

>