மரக்காணம் அருகே கரையை கடக்கும் நிவர் புயல்..!! தேவைபட்டால் மீட்பு பணிக்கு ஹெலிகாப்டர்; புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தகவல்

புதுச்சேரி: மரக்காணம் செய்யூர் இடையே ஆலம்பரை கோட்டை பகுதியில் நிவர் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை நிவர் புயல் 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், 12 கி.மீ வேகத்தில் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புயலின் கண் பகுதி இரவு 11 மணிக்கு கரையைத் தொடும் என்றும் புயல் கரையைக் கடக்க அதிகாலை 3 மணி ஆகும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் நாளை அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

புதுவையில் மீட்புப் பணிகளுக்கு, கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் சென்னை விமானப் படை மையத்தில் தயார் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் அதனைப் புதுவைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆய்வுக்குப் பின்பு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். நிவர் புயலையொட்டி புதுவை அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், தொகுதிதோறும் எம்எல்ஏக்கள் மற்றும் அதிகாரிகள் இரு நாட்களாகப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கிரண்பேடி வாட்ஸ் அப்பில் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது: புதுவையில் மீட்புப் பணிகளுக்கு, கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் சென்னை விமானப் படை மையத்தில் தயார் நிலையில் உள்ளது. புதுவைக்குத் தேவைப்பட்டால் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். நகர் முழுவதும் கடைகள், மார்க்கெட் மூடப்பட்டுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல வேண்டும். முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்வது நல்ல பலனைத் தரும். இவ்வாறு கிரண்பேடி குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>