தொடர்மழையால் 2வது முறையாக வைகை அணை நீர்மட்டம் 60 அடியை எட்டியது: விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால், வைகை அணையின் நீர்மட்டம் 60 அடியாக உயர்ந்துள்ளது. இந்தாண்டு 2ம் முறையாக அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியுள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட பாசனத்திற்கும், குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. அணையின் மொத்த நீர்மட்டம் 71 அடி. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு, தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 65 அடியாக உயர்ந்தது.

நீர்மட்டம் உயர்ந்ததால் மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் நீர்வரத்தை விட, அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் 2 மாதங்களில் அணையின் நீர்மட்டம் 47 அடியாக குறைந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழையால், மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இன்று காலை வைகை அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 1,632 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இன்று காலை அணையின் நீர்மட்டம் 60 அடியை எட்டியுள்ளது. அணையில் 3,501 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>