தோனி உள்ளிட்ட வீரர்களை உருவாக்கிய ராஞ்சி கிரிக்கெட் பிதாமகன் மரணம்

ராஞ்சி: தோனி உள்ளிட்ட வீரர்களை உருவாக்கிய ராஞ்சி கிரிக்கெட்டின் பிதாமகன் தேவல் சஹே மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் (ஜேஎஸ்சிஏ) முன்னாள் துணைத் தலைவர் தேவல் சஹே (74), ராஞ்சி கிரிக்கெட்டின் பிதாமகன் என்று அழைக்கப்படுகிறார். அவரது வழிகாட்டுதலின் கீழ், டஜன் கணக்கான கிரிக்கெட் வீரர்கள் தேசிய விளையாட்டுகளில் பங்கேற்றனர். கடந்த மூன்று மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார். பின்னர் அவர் குணமடைந்து அக். 9ம் தேதி வீடு திரும்பினார். இருப்பினும், அவர் 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இவரது மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர் கிரிக்கெட் தேர்வு குழுவில் பதவியில் இருந்த போது, முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அறிமுகப்படுத்தப்பட்டார். தோனி மட்டுமின்றி பிரதீப் கன்னா, ஆதில் ஹுசைன், அன்வர் முஸ்தபா, தனஞ்சய் சிங், சுப்ரதா டா, சஞ்சீவ் சின்ஹா, ராஜீவ் குமார் ராஜா மற்றும் சர்பராஸ் அகமது உள்ளிட்ட வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு தேவல் சஹே முக்கிய காரணமாக இருந்தார். இவர் கிரிக்கெட் வீரராக, நிர்வாகியாக வருவதற்கு முன்பு கால்பந்தில் சிறந்த வீரராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>