×

செங்கல்பட்டு மாவட்டத்தில் 235 ஏரிகள் நிரம்பியது; நீர் வரத்து அதிகரிப்பால் ஏரிகள் உடையும் அபாயம்: பீதியில் பொதுமக்கள்

* கனமழையால் 2வது நாளாக இயல்பு வாழ்க்கை பாதிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் மொத்தமுள்ள 235 ஏரிகள் நிரம்பியுள்ளது. தொடர்ந்து ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் ஏரிகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். நிவர் புயலின் தாக்கம் காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 2வது நாளாக இன்றும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மறைமலைநகர், சிங்கபெருமாள்கோவில், பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், ஆத்தூர், பொன்விளைந்த களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்து பெய்தது. இன்றும் தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த புயலின் காரணமாக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் இன்றி, பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோக்கள் ஓடவில்லை. மின்சார ரயில்களும் இயக்கப்படவில்லை. இந்த கன மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். தொடர் மழையால் மாவட்டத்தின் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக மொத்தம் 528 ஏரிகள் உள்ளன. இவற்றில் பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரியின் மொத்த கொள்ளளவு 23.3  அடி. தற்போது, 18 அடி நிரம்பி விட்டது. நீர்வரத்து அதிகமாக  உள்ளதால் ஏரி விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, மானாம்மதி, கொண்டங்கி, தையூர், கொளவாய், நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பொன்விளைந்தகளத்தூர், மண்ணிவாக்கம், கீழ்கட்டளை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 235 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. மற்ற ஏரிகளில் 80 சதவீதம் நிரம்பியுள்ளது. ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் எந்நேரமும், அதன் கரைகள் உடைந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் பொதுப்பணித்துறையினர், 2 அடிக்கு தண்ணீரை வெளியேற்றுகின்றனர். செங்கல்பட்டு நீஞ்சல்மடு அணையின் அனைத்து ஷட்டர்களும் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் பாலாற்றுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் ஏரிகள் நிரம்பி அதன் உபரிநீர் வெளியேறி வருவதால் பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கல்பாக்கம் அருகே வாயலூர், செங்கல்பட்டு அருகே உள்ள பூதூர், ஈசூர் பாலாற்று தடுப்பணைகள் நிரம்பி, அதன் உபரிநீர் வீணாக கடலில் கலக்கிறது. நீரை பாதுகாக்க வேண்டும் என்று ஏரி நீரை பயன்படுத்தும் விவசாயிகள் சங்கம், பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மாவட்டத்தில் புயல் சேத பாதுகாப்பு பணியில் 110 ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், அவர்கள் பறக்கும்படை அமைத்து கண்காணித்து வருவதாக செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

273 நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் புயல் பாதுகாப்பு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரி சமயமூர்த்தி தலைமையில் மாவட்ட கலெக்டர் பிரியா (பொறுப்பு) உள்ளிட்ட அதிகாரிகள், கடற்கரை பகுதி மற்றும் தாழ்வான பகுதிகளை ஆய்வு செய்து நிவாரண முகாம்களில் மக்களை தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். 32 கண்காணிப்பு குழுக்கள் உருவாக்கப்பட்டு ஒவ்வொரு குழுவுக்கும் 11 அனைத்து துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அவசர தேவைக்காக 044-27427412 மற்றும் 1077 என்ற அவசர தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : lakes ,district ,Chengalpattu ,Public , 235 lakes in Chengalpattu district were flooded; Risk of lakes breaking due to increased water supply: Public in panic
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!