×

மழைநீரில் தத்தளிக்கும் வட சென்னை: மக்கள் அவதி

சென்னை: நிவர் புயலின் எதிரொலியாக பெய்து வரும் தொடர் கனமழையால் வட சென்னையில் பெரும்பாலான பகுதிகள் மழை நீரில் தத்தளிக்கின்றன. சென்னையில் திங்கள் கிழமை இரவு முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மழையின் தீவிரம் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குடியிருப்புகள் மழை நீரில் தத்தளிப்பதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புரசைவாக்கத்தில் 14.82 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. வட சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் வரை மழைநீர் தேங்கி உள்ளது.

தொடர் மழையால் சாலையில் தேங்கிய நீர் கடைகள், வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத நிலையில், மின்வெட்டு காரணமாகவும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை நீடிப்பதால் வெள்ள நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. பலத்த காற்றுடன் பெய்த மழையால் அங்கங்கே மரங்கள் வேருடன் சாய்ந்தன. முக்கிய சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் லாரி ஒன்று விபத்தில் சிக்கியது. நல்வாய்ப்பாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார். மழைக்கு இடையே அந்த சாலையை சரி செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டன.


Tags : Chennai , North Chennai faltering in rainwater: People suffer
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...