×

மருதையாற்றில் கதவுகளுடன் தடுப்பணை கட்ட வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

அரியலூர்:மருதையாற்றில் கதவுகளுடன் கூடிய தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரியலூர் மாவட்டத்தில் வாரணவாசி அருகே காட்டாறு மருதையாறு ஓடுகிறது. இந்த மருதையாறு பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகி, அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் கலந்திடும் ஒரு நடுத்தர ஆறாகும்.பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பச்சைமலை தொடர்ச்சியில் கீழ்க்கணவாய், செல்லியம்பாளையம் உள்ளிட்ட கிராம பகுதியில் உற்பத்தியாகி பல கிளை ஓடைகளை தன்னகத்தே இணைத்து கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் 45 கி.மீ தூரமும், அரியலூர் மாவட்டத்தில் 30 கி.மீ தூரமும் என 75 கிமீ தூரம் பயணித்து அரியலூர் மாவட்டம் வைப்பூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் கலக்கிறது. இதனால் ஆண்டுதோறும் பல டிஎம்சி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் எந்தவித பயன்பாடுமின்றி கலக்கிறது.
வெள்ளக்காலங்களில் வரும் தண்ணீரை தேக்கி அருகே உள்ள ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக திருமானூர் ஒன்றிய பகுதி சார்ந்த விவசாயிகள் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை செய்தும் முன்னாள், இன்னாள் முதல்வர்கள் மற்றும் அரியலூர் மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அனுப்பப்பட்டும் இது நாள் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மருதையாற்றின் குறுக்கே கதவுகளுடன் கூடிய தடுப்பணை கட்டி கரைவெட்டி ஏரிக்கு நீர் கொண்டு வரும் வழிகளை நில அளவீடு செய்யும் பணியில் 1998 ல் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட விவசாயிகள் அதிகாரிகளுடன் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதுநாள் வரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மருதையாற்றில் வரக்கூடிய வெள்ள நீரை திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 100க்கும் மேற்பட்ட ஏரிகளில் நிரப்ப திட்டம் திட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்திடவும் பல்லுயிர்ப் பெருக்கத்தினை ஏற்படுத்திடவும் ஏரிக்குளங்களில் நீரினை நிரப்பிட நடவடிக்கை எடுக்கலாம். இதனால் விவசாயிகள், கால்நடைகள், பறவையினங்களுக்கும் குடிநீர் பஞ்சம் இல்லாத நிலையினையும் ஏற்படுத்திட முடியும். சோறு போடும் உழவனின் நியாயமான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த திட்டம் குறித்து அரசு கவனத்தில் கொண்டு விரைந்து செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் பல லட்சக்கணக்கான விவசாய நிலங்கள் நேரடியாகவும், போர்வெல் கிணறுகளில் நீர் மட்டம் உயர்ந்து மோட்டார் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் விவசாயிகள். கதவணை வழியாக அருகிலுள்ள ஏரி, குளங்களில் நீரைத்தேக்கி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Maruthayar: Farmers , With doors in the woods Need to build a dam: Farmers demand
× RELATED 7 இடங்களில் 106 டிகிரி வெயில்...