புயலால் வாழ்வாதாரம் பாதிப்பு வறுமையில் வாடுவதால் நிவாரணம் வழங்க வேண்டும்: அரசுக்கு மீனவர்கள் வலியுறுத்தல்

சாயல்குடி:  கனமழை, நிவர் புயல் எச்சரிக்கையை தொடந்து மீன்பிடிக்க செல்லாததால் வருமானம் இன்றி கஷ்டப்படுவதால் நிவாரணம் வழங்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். சாயல்குடி அருகே மூக்கையூரில் மிக ஆளமான கடற்கரை உள்ளது. இப்பகுதியில் ஏர்வாடி முதல் ரோச்மா நகர் வரை சுமார் 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் தொடர்ச்சியாக உள்ளன. இப்பகுதி மீனவர்களின் நலன் கருதி மூக்கையூரில் மீன்பிடி துறைமுகம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு மத்திய அரசு 113.90 கோடியும், மாநில அரசு ரூ.56.95 கோடியும் ஒதுக்கி 2016 முதல் பணிகள் நடந்து வந்தது. 2019 மார்ச் 4ம் தேதி துறைமுகம் திறக்கப்பட்டு  பயன்பாட்டிற்கு வந்தது.

இந்நிலையில் தற்போது கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக கனமழை எச்சரிக்கை மற்றும் நிவர் புயல் எச்சரிக்கை இருப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர். இதனால் படகுகளை பழுது பார்த்தல், பராமரிப்பு செய்தல், வலை பின்னுதல் உள்ளிட்ட வேலைகளை செய்து வருகின்றனர். மீன்பிடிக்க செல்லாததால் கூலி கிடைக்காமல், போதிய வருமானம் இன்றி குடும்பங்கள் வறுமையில் வாடி வருவதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து மூக்கையூர் மீனவர்கள் கூறும்போது, ‘‘மூக்கையூர், கன்னிகாபுரி, நரிப்பையூர், ரோச்மா நகர், வாலிநோக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இப்பகுதியிலுள்ள 80க்கும் மேற்பட்ட நாட்டுபடகுகள், 10க்கும் மேற்பட்ட விசை படகுகள், ஆழ்கடல் விசை படகுகளில் சென்று மீன்பிடி தொழில் செய்து வருகிறோம். இப்பகுதி மீனவர்கள் சிலர் உள்ளூர் பகுதி கடலுக்கு நாட்டு படகில் சென்று மீன்பிடித்து வருகிறோம். சில மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க, கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்கள், தூத்துக்குடி, நாகப்பட்டிணம் போன்ற வெளிமாவட்ட, மாநில கடல் பகுதிக்கு விசை படகில் சென்று மீன் பிடித்து வருகிறோம். ஏற்கனவே மீன்பிடி தடைக்காலம், கொரோனா ஊரடங்கால் தொழில் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தோம்.

இந்நிலையில் கனமழை காரணமாக  ஒரு வாரத்திற்கு மேலாக கடலுக்குள் செல்லவில்லை. இரண்டு நாட்களாக புயல் எச்சரிக்கை இருப்பதால் மீண்டும் செல்ல முடியாத நிலை. இன்னும் குறைந்தது 10 நாட்களுக்கு கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை இருக்கிறது. இதனால் வருமானம் இன்றி குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது. எனவே  அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும். உதவி தொகை உள்ளிட்ட நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.மீன்பிடிக்க செல்லாததால் கூலி கிடைக்காமல்,போதிய வருமானம் இன்றி குடும்பங்கள் வறுமையில்வாடி வருவதால் அரசு நிவாரணம் வழங்க வேண்டும்என வலியுறுத்தியுள்ளனர்

Related Stories:

>