ஓசூரில் இருந்து பங்களாதேஷ் சென்ற 100 சரக்கு வாகனங்கள்: சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டது

ஓசூர்: ஓசூரில் இருந்து 5 கோடி மதிப்பிலான 100 சரக்கு வாகனங்களுடன் பங்களாதேஷ் நாட்டுக்கு புறப்பட்ட சரக்கு ரயில் நேற்று வழியனுப்பி வைக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தயாரான 100 சரக்கு வாகனங்கள் பங்களாதேஷ் நாட்டுக்கு நேற்று சரக்கு ரயில் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது. ஓசூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சரக்கு ரயிலில் 100 சரக்கு வாகனங்கள் ஏற்றப்பட்டு ரயில் இன்ஜின் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்த ரயிலை தென்மேற்கு ரயில்வே பெங்களூர் மண்டல மேலாளர் அசோக்குமார் வர்மா மற்றும் ஓசூர் தனியார் நிறுவனத் தலைவர் ராகேஷ் மிட்டல் ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர்.

 இதுகுறித்து பெங்களூர் மண்டல ரயில்வே மேலாளர் அசோக் குமார் வர்மா கூறும்போது, இந்திய ரயில்வே மற்றும் தனியார் நிறுவனம் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தப்படி ஓசூரில் உற்பத்தியான மினி சரக்கு வாகனங்களுடன் முதல் ஏற்றுமதி ரயில் பங்களாதேஷ் நாட்டுக்கு செல்கிறது. இந்த சரக்கு ரயிலில் உள்ள 25 பெட்டிகளில் ஒரு பெட்டிக்கு 4 சரக்கு வாகனங்கள் வீதம் 100 ரக்கு வாகனங்கள் ஏற்றப்பட்டுள்ளது. இந்த சரக்கு ரயில் ஓசூரில் இருந்து புறப்பட்டு பெங்களூர் ரயில் நிலையம் வழியாக தர்மாவரம், விஜயநகர் ஹவுரா நகர் வழியாக 3 நாட்களில் சுமார் 2500 கி.மீட்டர் பயணித்து பங்களாதேஷில் உள்ள பேனாபோல் நகருக்கு சென்றடைய உள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், தென்மேற்கு ரயில்வே பெங்களூர் முதுநிலை மண்டல மேலாளர் கிருஷ்ணா ரெட்டி, ரயில் நிலைய மேலாளர் குமரன் மற்றும் ரயில் நிலைய போலீசார் பங்கேற்றனர்.

Related Stories:

>