பவானி ஆற்றில் கலக்கும் கழிவு நீரால் விவசாயம் பாதிப்பு: பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க கோரிக்கை

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் சாக்கடை நீர், தொழிற்சாலை கழிவுநீர் போன்றவை நேரடியாக கலப்பதினால் அப்பகுதியில் விவசாயம் பாதித்துள்ளது என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி பில்லூர் அணையை அடைந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரை கடக்கும் பவானி ஆறு சுமார் 40 கிலோமீட்டர் வளைந்து நெளிந்து ஓடி ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணையை சென்று அடைகிறது.

தமிழகத்தில் உருவாகி கோவை, ஈரோடு, திருப்பூர் என 3 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 25 லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2.5 லட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாவும் விளங்குகிறது.

மலைக்காடுகள் வழியாக பல கிலோமீட்டர் தூரம் பயணிக்கும் பவானி ஆறு மக்கள் நெருக்கம் மிக்க மேட்டுப்பாளையம் நகரை வந்தடையும் வரை மட்டுமே அதன் இயற்கை தூய்மை நீடிக்கிறது. இதன் பின்னர் சுமார் 1.45 லட்சம் மக்கள் தொகை கொண்ட மேட்டுப்பாளையம் பகுதியின் ஒட்டு மொத்த கழிவு நீரும் எந்தவித சுத்திகரிப்பும் செய்யப்படாமல், நேரிடையாக பவானி ஆற்றில் கலக்கப்படுகிறது. தினசரி 24 மணி நேரமும் மேட்டுப்பாளையம் நகர மக்கள் பயன்படுத்தும் அனைத்து சாக்கடை கழிவுகளும் தொடர்ந்து பவானி ஆற்றில் கலந்து வருகின்றன. சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் நேரிடையாக பவானியாற்றில் சிறு சிறு வாய்க்கால் போல் ஓடி ஆற்றில் கலக்கின்றன. அதே போல் தொழிற்சாலை கழிவு நீரும் பவானி ஆற்றில் கலக்கின்றன. இதனால் பவானி ஆறு நீர் மிகவும் மாசடைந்து பாழ்பட்டு போகிறது.

பவானி ஆற்று நீர் மாசுபடுவதை தடுக்க தமிழக அரசு சார்பில் ரூ.97 கோடியே 70 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகளால் மேட்டுப்பாளையம் நகராட்சி 33 வார்டுகளிலும் உள்ள சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. இதனால் வாகன போக்குவரத்து நெரிசலும், விபத்தும் அடிக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எடுத்துச் செல்லவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த பாதாள சாக்கடை பணிகள் துவங்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.மேட்டுப்பாளையம் பகுதியில் வாழை விவசாயம், காய்கறிகள் விவசாயம், மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகின்றன. பவானி ஆற்றின் நீர் மாசடைந்து வருவதால் விவசாயிகளுக்கு விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் நீரின் தன்மை காரணமாக தூர்நாற்றமும் வீசுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ‘‘ இயற்கை சீற்றங்கள், மூலப்பொருட்கள் விலை உயர்வு, விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காதது, கூலி ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயம் செய்து வருகின்றோம். பவானி ஆற்று நீரை மட்டுமே இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுக்கு முன்னர் கிடைத்த விளைச்சல் பல்வேறு காரணங்களால் குறைந்து வருகிறது. தற்போது மிகவும் குறைந்த அளவே விளைச்சல் கிடைக்கின்றது. பவானி ஆற்று நீர் மாசுப்படுவது இதன் முக்கிய காரணமாகும். இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் மேட்டுப்பாளையம் பகுதியில் விவசாயம் அழிந்து பாலைவனமாக மாறிவிடும்.

விவசாயம் மட்டுமல்ல குடிநீரும் பாதிக்கப்படுகிறது. எனவே பவானி ஆற்று நீர் மாசுப்படுவதை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து செயல்ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தொழிற்சாலை கழிவுகள் நேரடியாக கலப்பதும் தடுக்கப்பட வேண்டும்,’’ என்றனர்.  மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி அடிவாரத்தில் தெற்கும், வடக்குமாக பிரிந்து செல்லும் நீரோடை பெரும்பள்ளம் நீரோடை. இந்த நீரோடை கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் தேர்வு நிலை பேரூராட்சி ,கூடலூர் பேரூராட்சி, வீரபாண்டி பேரூராட்சி, காரமடை தேர்வு நிலை பேரூராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளான   கருப்பமாடசாமி கோவில் , தேவையம்பாளையம், புதுப்புதூர், வண்ணான் கோவில், கே.ஆர்.நகர், பிரஸ்காலனி, சிக்கதாசன்பாளையம், கண்ணார்பாளையம் என பல ஊர்கள் வழியாக சென்று பவானி ஆற்றில் கலக்கின்றனது.

இந்த பெரும்பள்ளம் நீரோடை சுற்றியுள்ள பகுதியில் மட்டும் சுமார் 5000 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்த நீரோடை இப்பகுதி விவசாயிகளுக்கு நேரடி நீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள சில கிராமங்கள் வரை மட்டுமே நீரோடை நல்ல நீராக உள்ளது, விவசாயத்திற்கு பயன்படுகிறது. பெரியநாயக்கன்பாளையம் பகுதிற்கு வரும் போது சாக்கடையாக மாறி விடுகிறது.வீட்டு உபயோக கழிவு நீர் , தொழிற்சாலை ரசாயன கழிவுகள் போன்றவை எந்த ஒரு சுத்திகரிப்பும் இல்லாமல் நேரடியாக கலக்கப்படுகிறது.

இதுகுறித்து பெரியநாயக்கன் பாளையம் விவசாயிகள் கூறுகையில், ‘‘ விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லும் அதே நேரத்தில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் வழங்ககூடிய நீர் நிலைகள் மாசு அடைந்து வருகிறது. நீர் நிலைகள், ஆறுகள், குளங்கள் என அனைத்து நீராதாரங்களை பாதுகாத்திட அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Related Stories:

>