சின்ன வெங்காயம், வெள்ளைச்சோளத்தில் அடுத்தடுத்து நோய் தாக்குதல் ஒரு லட்சம் ஏக்கர் பயிர்கள் பாதிப்பு: கண்டுகொள்ளாத வேளாண் அதிகாரிகள்

கோவில்பட்டி: கோவில்பட்டி பகுதியில் மக்காச்சோளத்தை தொடர்ந்து வெள்ளைச்   சோளத்திலும் புழுத் தாக்குதல் தொடர்கிறது. இதேபோல் சின்ன வெங்காயப்  பயிர்களில் நண்டு கால் நோய் தாக்கியதால் சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பிலான  பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருவதால்  விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில்  ராபி பருவத்தில் உளுந்து, பாசி, கம்பு, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம்,  சூரியகாந்தி, கொத்தமல்லி போன்ற பல்வேறு வகை பயிர்கள் சுமார் 5 லட்சம்  ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளது. ஆவணி மாதம் கடைசியில் இருந்து முதற்கட்டமாக  மக்காச்சோளம், வெள்ளைச்சோளம் விதைப்பு செய்யப்பட்டது. பின்னர் ஒரு மாதம்  கழித்து உளுந்து, பாசி, கம்பு, பருத்தி போன்றவை பயிரிடப்பட்டன.  புரட்டாசியில் இருந்து ஐப்பசி 20ம் தேதி வரை வடகிழக்கு பருவமழை பெய்யாததால்  இந்த  விதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்திருந்தன. இதனால் விவசாயிகள்  இருமுறை விதைப்பு செய்ய நேரிட்டது.

கடந்த 3 ஆண்டுகளாக மக்காச்சோள  பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் கடுமையாக ஏற்பட்டு விளைச்சல்  முற்றிலும் பாதிக்கப்பட்டன. தற்போது பருவமழை பெய்து வருவதால்  மக்காச்சோள பயிர்கள் நன்கு வளர்ந்துள்ளன. ஆனால் தற்போதும் படைப்புழு  தாக்குதல் தொடர்கிறது. பச்சைப்பசேல் என காணப்படும் செடிகளின் இலைகள்  புழுத்தாக்குதலால் ஓட்டை உடைசல்களாக காணப்படுகின்றன.வெள்ளைச் சோளம்  குறைந்த காலத்தில் விளையக்கூடியது. தற்போது சில கிராமங்களில் வெள்ளைச் சோளம்  கதிர் பிடிக்கும் நிலைக்கு வந்து விட்டது. ஆனாலும் குருத்துப்புழு தாக்குதல்  கடுமையாக காணப்படுகிறது. இதனால் கதிர் பிடிக்க முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. மக்காச்சோளத்தை போல் வெள்ளைச் சோள பயிர்களில் புழுத்  தாக்குதல் ஏற்பட்டதால் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வெள்ளைச் சோளப்  பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

எனவே  மக்காச்சோளப் பயிர்களுக்கு மருந்து தெளிப்பதற்கு கடந்த வருடம் அரசு  மானியம் வழங்கியது போல் வெள்ளை சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கும் மானியம்  வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.இதேபோல் விளாத்திகுளம்,  கோவில்பட்டி, புதூர், எட்டயபுரம் பகுதியில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில்  பயிரிடப்பட்டுள்ள சின்ன வெங்காயத்தில் நண்டு  கால் நோய் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  விவசாயிகளுக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டு வருவதால் கோவில்பட்டி வட்டார  விவசாயிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

இதுகுறித்து  கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் கூறுகையில், ‘‘கோவில்பட்டி  பகுதியில் கடந்த ஆண்டுகளில் மக்காச்சோளப் பயிர்களை அமெரிக்கன் படைப்புழு  தாக்கியது. இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. தற்போது  விவசாயிகள் சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் வெள்ளைச்சோளம் மற்றும் சின்ன  வெங்காயம் பயிரிட்டுள்ளனர். வெள்ளைச்சோளத்திலும் தற்போது குருத்துப்புழு  தாக்குதல் தொடர்கிறது. இதேபோல் சின்ன வெங்காயத்தில் நண்டு கால் நோய் பரவி  வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட  விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்றார்.

அழுகிய பயிர்கள்

கோவில்பட்டி  பகுதி யில் மக்காச்சோளம், உளுந்து, பாசி ஆகியவற்றை விவசாயிகள்  பயிரிட்டுள்ளனர். கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால் பயிரிட்ட  நிலங்களில் தண்ணீர் புகுந்து பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளன. இதனால்  விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி சுரேஷ்  என்பவர் கூறுகையில், ‘‘நான் 5 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம், உளுந்து,  பாசி பயிறு ஆகியவை பயிரிட்டு இருந்தேன். தற்போது கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை  பெய்து வந்ததால் வயல்களில் தண்ணீர் புகுந்து மக்காச்சோளம், உளுந்து ஆகிய  பயிர்கள் அழுகி விட்டன. இதனால் நான் என்ன செய்வது என்று தெரியாமல்  வேதனையில் உள்ளேன். வங்கியில் கடன் வாங்கி செலவு செய்துள்ளேன். எனவே  அரசு எனக்கும், என்னைப் போன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு  வழங்க வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>