ஆண்டுதோறும் 80 ஆயிரம் மெட்ரிக் டன் உற்பத்தி வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய முடியாமல் விழிபிதுங்கும் விவசாயிகள்: முதல் இடம் பிடித்தும் தவிக்கும் அவல நிலை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு 80 ஆயிரம் மெட்ரிக் டன் சின்ன வெங்காயங்கள் உற்பத்தி செய்யப்பட்டும் விலை நிர்ணயம் செய்ய முடியாமல் விவசாயிகள் விழிபிதுங்கி உள்ளனர்.பெரம்பலூர் மாவட்டம் மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள பூமியாகும். இந்த மாவட்டத்திலுள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தை நம்பித்தான் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். இருந்தும் இமாலய சாதனைகள்கூட இவர்களுக்கு ஈசியான ஒன்றாகி விட்டது. ஆண்டுதோறும் சராசரியாக 1.30 லட்சம் ஏக்கரில் மக்காச் சோளமும், 53 ஆயிரம் ஏக்கரில் பருத்தியும், 15 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சின்னவெங்காயமும் என 3 பயிர்களை மட்டுமே 2 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்து மூன்றின் உற்பத்தியிலும் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது. சின்ன வெங்காயம் கடந்த 2014-15ம் ஆண்டில் 15,808 ஏக்கரும், 2015-16ம் ஆண்டில் அதிகப்பட்சமாக 21,983 ஏக்கரும், 2016-17ம் ஆண்டில் 18,525 ஏக்கரும், 2017-18ம் ஆண்டில் 16,672 ஏக்கரும், 2018-19ம் ஆண்டில் 17,406 ஏக்கரும், 2019-20ம் ஆண்டில் 16,300 ஏக்கரும் சாகுபடி செய்யப்பட்டுள்ள து. ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோ வெங்காயத்தை உற்பத்தி செய்வதால் ஆண்டுக்கு 80 ஆயிரம் மெட்ரிக் டன் சின்னவெங்காயம் பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்து, மேலப்பூலியூர், நாவலூர், திருப்பெயர், குரும்பலூர் சுற்றுவட்டார வயல்களில் முகாமிட்டு அடிமாட்டு விலைக்கு சின்னவெங்காயத் தை பேரம்பேசி கிலோ ரூ 8க்கு கொள்முதல் செய்த போதுதான் கொந்தளிக்க தொடங்கின விவசாய சங்கங்கள். அப்போது தான் அதிகப்படியாக உற்பத்தி செய்யப்படும் ஆலத்தூர் தாலுகாவில், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் 50 ஆயிரம் மெட் ரிக் டன் சேமிக்கும் அளவிற்கு சின்னவெங்காயம் சேமிப்புக் கிடங்கு, ஏல மையத்துடன், குளிர்சாதன வசதியோடு ரூ.1.14 கோடியில் கட்டப் பட்டது. ஆரம்பத்தில் சின்ன வெங் காயத்தை ஏல மையத்திற்கு கொண்டு சென்ற 50க்கும் குறைவான விவசாயி களும் அதிகாரிகளின் அலட்சியத்தால் அதிருப்தியடைந்து, எதிர்பார்த்த விலை கிட்டாததால், அடுத்த ஓராண்டில் அனைவருமே வெங்காயம் கொண்டு செல்வதை அடியோடு நிறுத்தி கொண்டனர்.

பழையபடி தங்கள் வயல்களில் பட்டறை அமைத்து பாதுகாக்கும் முறைகளையே பின்ப ற்ற தொடங்கினர். மாநில அளவில் முதலிடத்திலிருந்தும், மருந்துக்குக்கூட மாவட்ட நிர்வாகம் அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறதே என்ற புகார்களுக்குப்பிறகு மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக்கிட தமிழ்நாடு வேளாண் விற்பனை வாரியத்தின் மூலம் ரூ,69லட்சத்தில், பொது உணவுப் பதப்படுத்தும் மையத்தை கடந்த 2017 ஆகஸ்டில் மத்திய அரசு திறந்து வைத்தது. திறந்து வைத்ததோடுசரி, மாவட்ட அதிகாரிகள்கூட மறுமுறை வந்து பார்க்கவே இல்லை. இதனால் திறக்கப்பட்ட நாளுக்குப்பிறகு இதுவரை திறக்கப்படாமலேயே உள்ளது.விவசாயிகளின் விரக்தியைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ தோட்டக் கலைத்துறை மட்டும் வெங்காய சாகுபடியாளர்களுக்காக பட்டறை வெங்காயத்தை பாதுகாக்க கொட்டகைகளை அமைத்து கொடுத்து வருகிறது. இருந்தும் போதுமான ம ழையின்மையால் விலையின்றி வீதிக்குவீதி கொண்டுசென்று விற்கும் நிலைக்குத்தான் சின்ன வெங்காயம் சிரிப்பாய் சிரிக்கிறது. வியாபாரிகளால் வயல்களில் ரூ.30 முதல் 50க்கு கொள்முதல் செய்யப்படும் வெங்காயம், தினசரி காய்கறி மார்க்கெட்டில் ரூ.100க்கு விற்கப்படுகிறது. விதைக்காக வெங்காயத்தை விவசாயிகள் வயல்களில் இருப்பு வைத் தது, வெளிமாநில வரத்து குறைவு, பெல்லாரி வெங்காயத்தின் பதுக்கல்கள் மற்றும் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் சின்ன வெங்காயத்தின் விலை சிகரத்தில் ஏறி நிற்கிறது.

விதைக்காத வியாபாரிகளுக்கு கொள்ளை லாபம் கிடைத்தாலும், பயிரிட்டு அறுவடை செய்த விவசாயிகளின் நிலையோ பரிதாபமாக உள்ளது. விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய் ய முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். அறுவடை செய்த வயல்களில் இருந்து 50 ரூபாய்க்கு மேல் இது வரை எந்த வியாபாரியும் விலை கொடுத்து வாங்கியதே இல்லை. இதனால் வெங்காயத்தை உரிக்காமலேயே உற்பத்தி செய்த பாவத்திற்காக கண்ணீர் சிந்துவது விவசாயிகள் மட்டும்தான். வேளாண்(விற்பனை வணிகம்) துறையினர் ஆண்டுக் கணக்கில் மூடிக் கிடக்கும் ஏல மையத்தைத் திறந்து செயல்படுத்தவோ, பொது உணவுப் பதப்படுத்தும் மையத்தைத் திறந்து மாவட்டத்தில் உற்பத்தி செய்த வெங்காயத்தை மதிப்புக் கூட்ட ப்பட்ட பொருட்களாக மாற்றவோ மனது வைக்காததால் விவசாயிகள் அனைவரும் விரக்தியில்தான் இருந்து வருகின்றனர்.

தங்கத்திற்கு நிகராக உணவு பொருளில் தன்னிகரற்றுக் காணப்படும் வெங்காயம் வி யர்வை சிந்தி உழைத்துப் பயிரிட்ட விவசாயிகளுக்கு லாபம் சேர்க்காமல், வியாபாரிகளைத்தான் உச்சத்திற்குக் கொண்டு சேர்க்கிறது. உரக்கக் கத்து கின்ற உற்பத்தியாளர்களின் குரல் ஏனோ உணர்வு ள்ள அதிகாரிகளைக்கூட உசுப்பி விடாமல் உள்ளது. இதனால் உற்பத்தி செய்த விவசாயிகள் உறங்கக்கூட முடியாமல் தவிக்கும்போது, ஊர் ஊராக தெருத் தெருவாக மினி லாரிகளில் கொண்டு சென்று கிலோ 100 ரூபாய்க்கு வியாபாரிகளால் விற்கப்படுவது விவசாயிகளை வாாழ்வின் விளிம்பு நிலைக்குத் தள்ளி வருகிறது. இதனால் பெரு நஷ்டத்தி லிருந்து மீள்வதற்காக பெரம்பலூர் நகரில் பழைய பஸ் ஸ்டாண்டு புதிய பஸ் ஸ்டாண்டு, சங்குபேட்டையென சாலையோரங்களில் குவித்து வைக்கப்பட்டு சின்னவெங்காயம் விரக்தியடைந்த விவசாயிகளால் கூவிக்கூவி விற்கப் படுகிறது.

ரேஷன் கடையில் விற்பனை செய்ய வேண்டும்

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செல்லதுரை தெரிவித்ததாவது:பெரம்பலூர் மாவட்டம் சின்ன வெங்காய உற்பத்தியில் தமிழகத்தில் தொடர்ந்து முதலிடத் தையே பெற்று வருகிறது. இருந்தும் வெங்காயத்திற்கான விலையை இப்பகுதி விவசாயிகள் நிர்ணயம் செய்ய முடியவில்லை. வெங்காயத்தின் விலையை வியாபாரிகளே நிர்ணயம் செய்வதால் வெங்காய சாகுபடியாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் படிப்படியாக வெங்காய சாகுபடியைக் கைவிடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்ட பலநூறு டன் பெல்லாரி வெங்காயத்தை மாவட்ட நிர்வாகம் மீட்டு மலிவு விலைக்கு ரே ஷன் கடைகளில் விற்பது போல், தமிழக அரசு பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்கா யத்திற்கு உரிய விலையை நிர்ணயம் செய்து, நேரடியாக அதிகாரிகள் மூலம் கொள்முதல் செய்து தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ரேஷன் கடைகளில் மலிவு விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதோடு செட்டிக்குளம் பகுதியில் மத்திய மாநில அரசுகளின் நிதியை கோடிக்கணக்கில் செலவழித்துக் கட்டப்பட்ட சின்ன வெங்காய சேமிப்புக் கிடங்கு, ஏலமை யம் மற்றும் பொது உணவு பதப்படுத்துதல் மையம் ஆகியவற்றைத் திறந்து சாகு படி செய்த வெங்காயம் அனைத்தையும் சந்தைப்படுத்தவும், சேமித்து வைக்கவும், அதனை மதிப்புக் கூட்டப்பட்டப் பொருளாக மாற்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்

முன்னோடி விவசாயி ராமர் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரும்பாவூர், பூலாம்பாடி, அகரம்சிகூர், வடக்கலூர் போன்ற இடங்களில் அறுவடை சீசனுக்கு மட்டும் ஆண்டுதோறும் அரசே நெல்லைக் கொள்முதல் செய்வதுபோல் சின்ன வெங்காயத்தையும் அரசே நேரடியாக பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய வட்டார அளவில் கொள்முதல் நிலையங்கள் அமைத்து, தரத்துக்கு ஏற்றபடி உரிய விலையை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால் சின்ன வெங்காய சாகுபடி பரப்பு மேலும் அதிகரித்து பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சம் மெட்ரிக் டன் சின்ன வெங்காய உற்பத்தியை மேற்கொண்டு உற்பத்தியின் உச்சத்தை தொட முடியும்.

Related Stories:

>