அமராவதி ஆற்றில் உலா வரும் முதலை: பொதுமக்கள் பீதி

உடுமலை: அமராவதி ஆறு மற்றும் ஆற்றின் கரையோர பகுதிகளில் முதலைகள் உலா வருகின்றன. இவற்றை உடனடியாக பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை அமைந்துள்ளது. இந்த அணையில் ஏராளமான முதலைகள் உள்ளன. இவை அணையில் இருந்து பாசனத்திற்காக, குடிநீருக்காக மற்றும் வெள்ளப்பெருக்கின் போது தண்ணீர் திறந்து விடும் சமயங்களில் அணையின் ஷட்டர் வழியாக ஆற்றில் அடித்து செல்லப்படுவது வழக்கம்.சமீப காலமாக, உடுமலை அடுத்துள்ள கல்லாபுரம் அமராவதி ஆற்றில் சுமார் 10 அடி நீளமுடைய முதலை ஒன்று அவ்வப்போது தண்ணீருக்கு மேலே வந்து ஆற்றின் நடுவே உள்ள பாறையில் படுத்து தூங்கி வருகிறது.

இதனை ஆற்றிற்கு குளிக்க செல்லும் ஆண்களும், துவைக்க செல்லும் பெண்களும் பார்த்துள்ளனர். ஆற்றில் முதலை உலா வருவதை கண்டு அவர்கள் பீதி அடைந்துள்ளனர். பகல் நேரத்தில் முதலை ஆற்றின் கரையோரம் உள்ள செடி, கொடி, புதர்களில் பதுங்கியிருக்க கூடும் என அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, வனத்துறையினர் விரைந்து வந்து பொதுமக்களை பீதிக்குள்ளாக்கி வரும் முதலையை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>