×

சகலகலா டாக்டர்!

நன்றி குங்குமம் தோழி

தாய், மனைவி, மகள், தங்கை, மருமகள்னு பெண்களுக்குதான் எத்தனை முகங்கள். ஒவ்வொரு முகத்திற்கு பின் அந்தந்த  கதாபாத்திரத்திற்கான பொறுப்புகளை இன்றும் பெண்கள் சுமந்து கொண்டு இருக்கிறார்கள். பத்தாம் கிளாஸ் படிச்ச பொண்ணும் வேலைக்கு  செல்லும் காலமிது. சிலருக்கு வாய்ப்பு தேடி வரும், சிலர் அமைத்துக் கொள்வார்கள்.‘‘நான் இரண்டாவது ரகம். எனக்கான வாய்ப்பை நானே  அமைச்சுக்கிட்டேன்’’ என்கிறார் ஹரிணீஸ்வரி விஜய். பல் மருத்துவர், அழகுக் கலை நிபுணர் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என  பன்முகங்களை இன்முகத்தோடு சுமந்து வருகிறார் ஹரிணீஸ்வரி.

‘‘நான் சென்னைவாசி. அப்பா சொந்தமா தொழில் செய்து வந்தாங்க. அம்மா 10வது வரை தான் படிச்சு இருக்காங்க. அம்மாவுக்கு 15  வயசிலேயே கல்யாணமாயிடுச்சு, அதனால அவங்களால மேல படிக்க முடியல. அம்மாவுக்கு குறைந்தபட்சம் டிகிரியாவது படிக்கணும்னு  ஆசை.ஆனா குடும்பச்சூழல் அவங்கள திருமணம் என்ற பந்தத்துக்குள்ள தள்ளிடுச்சு.அவங்க கனவே நாங்க நல்லா படிச்சு நல்ல நிலைக்கு  வரணும் என்பது தான்.ஆரம்பத்தில பெங்களூரில் இருந்தோம். அப்பாவோட தொழில் காரணமா சென்னைக்கு வந்துட்டோம்.

மருத்துவம் தேர்வு செய்ய காரணம்?

பள்ளியில் படிக்கும் போதே  எதிர்காலத்தில் பல் நிபுணரா வரணும்னு மைண்ட்ல  பிக்ஸ் செய்தேன். அதுக்கு நானே தான் காரணம். சின்ன  வயசுல என்னோட பல் ரொம்பவே மோசமா இருந்துச்சு.என் பல்ல சீர் செய்ய அனைத்து தரப்பு சிகிச்சையும் எடுக்க வேண்டியதா  இருந்தது.எனக்கு சிகிச்சை பார்த்த டாக்டர் ரொம்பவே பொறுமைசாலி திறமைசாலியும் கூட. என்னை ரொம்பவே பொறுமையா ஹேண்டில்  செய்தார்.அவரோட அந்த பொறுமை மற்றும் சிகிச்சை முறை என்ைன ரொம்பவே கவர்ந்துச்சு.அப்ப முடிவு செய்தேன்.நான் பல் நிபுணரா  தான் வரணும்னு.

பல் நிபுணர் சரி... அழகுக்கலை..?

எல்லா பொண்ணுக்கும் தான் அழகா இருக்கணும்னு ஆசை இருக்கும்.புருவத்தை திருத்துவது முதல் ஃபேஷியல், மெனிக்யூர், பெடிக்யூர்  செய்யாத கல்லூரி பெண்களே கிடையாது.இதில் நான் ஒன்ணும் விதிவிலக்கு இல்லை. இப்படி நாம அழகு நிலையத்தில் போய் செய்வதை  நாமே நமக்கு ஏன் செய்துக்கக்கூடாதுன்னு எனக்குள் ஏற்பட்ட  க்யூரியாசிட்டி தான் அந்த கலையை கத்துக்க வச்சது. கல்லூரி இரண்டாம்  ஆண்டு படிக்கும் போதே சென்னையின் பிரபல அழகு நிலையத்தில் சேர்ந்து பயிற்சி எடுக்க ஆரம்பிச்சேன்.பயிற்சி காலத்தில் இருக்கும்  போதே, நண்பர்கள், உறவினர்கள்னு ஃபேஷியல், பெடிக்யூர், ஹேர்கட் எல்லாம் செய்து விடுவேன்.அவங்க மூலம் கல்யாண பொண்ணுக்கு  அலங்காரம் செய்ய சொல்லி கேட்டாங்க. நானும் செய்ய ஆரம்பிச்சேன்.நம்மளால ஒரு பெண்ணை அதுவும் அவளின் வாழ்க்கையின்  முக்கிய நாளில் அழகா காட்டும் போது நமக்கு பெருமை தானே. அது எனக்குள் ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்துச்சு.அதன் பிறகு  வீட்டிலேயே அழகு நிலையம் ஒன்றை சிறிய அளவில் துவங்கினேன்.ஒரு பக்கம் கல்லூரி மறுபக்கம் அழகு நிலையம்னு கால்ல சக்கரம்  கட்டிக் கொண்டு பறந்தேன்.

ஈவென்ட் மேனேஜ்மென்ட் பக்கம் திரும்ப காரணம் ?


அப்ப நான் படிச்சிட்டு இருந்தேன்.பிரைடல் ஆர்டர் கிடைச்சாலும், 365 நாட்களும் இருக்கும்னு சொல்ல முடியாது.மேலும் அதற்கான  பொருட்களின் விலையும் அதிகம்.அப்ப என் வயசு கல்லூரிப்  பெண்கள் பகுதி நேர வேலை பார்த்திட்டு இருந்தாங்க. எனக்கும் ஏதாவது  செய்யணும்னு  தோணுச்சு.மேலும் பிரைடல் ஆர்டர் இல்லாத நேரங்களில் பிரீயா இருக்கிற மாதிரி தோணுச்சு.அந்த நேரத்தை வேறு எப்படி  எனக்கானதா மாற்றலாம் என்று யோசிச்சேன்.விசேஷ நாட்களில் மெஹந்தி மற்றும் நெயில் ஆர்ட் போட்டா என்னன்னு  தோணுச்சு.சென்னை அண்ணாநகர், முகப்பேரில் உள்ள பெரிய அளவு ஃபேன்சி கடைகள் மற்றும் பெண்களுக்கான துணிக்கடையில் போய்  என்னோட ஐடியாவை சொன்னேன்.

விசேஷ நாட்களில் வாடிக்கையாளர்கள், துணியோ அல்லது அணிகலன்கள் வாங்க வருவாங்க. அந்த சமயத்தில் ஒரு பத்து நாட்கள்  மெஹந்தி மற்றும் நெயில் ஆர்ட் செய்தால் அதற்காகவே ஒரு கூட்டம் வரும்னு நானே மார்க்கெட்டிங் செய்தேன். அவங்க வியாபாரிகள்.  சம்மதம் சொன்னாங்க. ஒரு வாரம் கடைக்குள்ளே சின்னச்சின்ன ஸ்டால் போட்டு செய்ய ஆரம்பிச்சேன்.இப்படி விளையாட்டா  ஆரம்பிச்சதுதான் இப்ப ‘பிரசம் ஈவென்ட் மேனேஜ்மென்ட்’ என பெரிய அளவில்வளர்ந்துள்ளது. எங்களின் முதல் கிளையன்ட் டாட்டா ஸ்கை  நிறுவனம்.அவங்க டி.டி.எச்சை  லான்ச் செய்யும் நிகழ்ச்சியை நாங்க ஒருங்கிணைப்பு செய்து கொடுத்தோம். அதனை தொடர்ந்து பல  கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அவர்களின் நிறுவன நிகழ்ச்சியினை செய்து கொடுத்தோம்.இப்ப ரீசன்டா டென்டல் கவுன்சிலோட வைர  ஆண்டு விழாவை எங்க நிறுவனம் தான் நடத்தி கொடுத்தது.

டாக்டரான நீங்க எண்ணெய்  தயாரிப்பில் எப்படி?

டாக்டர் முடி வெட்டும் போது, எண்ணெய்  தயாரிக்கக் கூடாதா? நான் அழகுக் கலையில் பயிற்சி எடுக்கும் போது  நிறைய பேர்  கேட்பாங்க. ‘‘டாக்டர் நீங்க, இங்க  சரும சிகிச்சை செய்றீங்க...’’ இரண்டுமே வேலைதான். வேலை செய்யஏன் கூச்சப்படணும்.  எல்லாத்தையும் விட பல்லுக்கும் அழகுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு. எல்லா பெண்களும் தான் அழகா இருக்கணும்னு நினைப்பாங்க.  அதனால தான் புருவத்தை திருத்திக் கிறாங்க. ஃபேஷியல், கை கால்களுக்கு மெனிக்யூர், பெடிக்யூர் செய்துக்கிறாங்க. பல்லும் முக  சம்பந்தமான விஷயம். சிரிச்சா பார்க்க ஸ்னேகா ேபால இருக் கணும்னு ஒவ்வொரு பொண்ணும் நினைப்பதில் தப்பில்லை. அந்த அழகான  சிரிப்புடன் அவர்களின் முகத்தையும் அழகா மாற்ற இந்த இரண்டு துறையால தான் முடியும்.

சருமத்திற்கு அடுத்து பெண்களின் கவனம் தலைமுடி.தலைமுடி நீளமா அடர்த்தியா கருமையா இருக்கணும். அது தான் எண்ணெய் மற்றும்  ஹேர் டை தயாரிக்க தூண்டுச்சு.மார்க்கெட்டில் வரும் பல எண்ணெய்களில் மினரல் எண்ணெய் சேர்க்கிறாங்க. எந்த கலப்படமும் இல்லாம  16 வகை மூலிகைக் ெகாண்டு இந்த எண்ணெய் மற்றும் ஹேர் டையை தயாரிக்கிறேன். என்னதான் டாக்டரா இருந்தாலும், இதில்  கொஞ்சம் ரிசர்ச் செய்தேன். நிறைய டிரையல் அண்ட் எரர் முறையில் ஆய்வு செய்த பிறகு, நான் எதிர்பார்த்த ரிசல்ட் வந்துச்சு. இவை  இரண்டுமே மார்க்கெட்டில் கிடைக்காது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப நானே  தயாரிச்சு தரேன்.

உங்க நேரத்தை எப்படி மேனேஜ் செய்றீங்க?

24  மணி நேரம் பத்தலன்னு சொல்ற வங்க அவங்க நேரத்தை கரெக்டா பின்பற்றலன்னுதான் நான் சொல்வேன்.நாம செய்யும் வேலைக்கு  கண்டிப்பா வீட்டில் உள்ளவர்களின் சப்போர்ட் அவசியம்.அப்பதான் டென்ஷன் இல்லாம நம்ம வேலையில் கவனம் செலுத்த முடியும்.ஒரு  மாசம் எந்த ஒரு வேலையும் செய்யாம வெறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பல் சிகிச்சைக்கான கேம்ப் நடத்தினேன்.சுமார் 5000  மாணவர்களுக்கு இலவச டென்டல் செக்கப் செய்தேன்.பெரிய பள்ளியில் இது போன்ற கேம்ப் நடப்பது இயல்பு.ஆனா இந்த குழந்தைகளுக்கு  யாரும் ெசய்ய முன் வரமாட்டாங்க.

நான் சராசரிைய விட கொஞ்சம் உயரம்.அப்படி இருந்தும் ஆசிரியர் மூக்குக்கு கீழ தான் உட்காருவேன்.அவங்க வகுப்பில் சொல்லிக்  கொடுப்பதை அப்படியே குறிப்பு எடுத்துப்பேன்.என்னுடை 90 சதவிகித படிப்பு வகுப்பிலேயே முடிஞ்சிடும்.எப்போதுமே ஆசிரியர் வகுப்பில்  சொல்லித் தருவதை கவனிச்சாலே போதும் அதுவே நாம முக்கால்வாசி படிச்ச மாதிரி. பரீட்சைக்கு மூணு மாசத்துக்கு முன்னாடி  டைம்டேபிள் போட்டு படிப்பேன்.எனக்கு மொத்த புத்தகத்தையும் படிச்சு தான் பழக்கம்.வகுப்பு முடிச்சிட்டு நான் வெளியே வர கார் தயாரா  நிக்கும், அழகுக்கலை பயிற்சிக்கு.மாசத்தில் எல்லா நாட்களும் அழகுக்கலை மற்றும் ஈவென்ட் மேனேஜ்மென்ட் இருக்காது.அந்த நாட்களை  நான் படிக்கபயன்படுத்திக் கொள்வேன்.இப்ப அப்பாய்ன்ட்மென்ட் முறையில் தான் பேஷண்டுகளை பார்க்கிறேன்.நான் கிளிப் ஸ்பெஷலிஸ்ட்.  என்னோட ஒரு பேஷண்டை சுமார் இரண்டு வருஷம் வரை கண்காணிக்கணும்.அப்பாயின்ட்மென்ட் இல்லாத நேரத்தில் மத்த வேலைகளில்  என்னை ஈடுபடுத்திக் கொள்வேன்.

உங்க குடும்பம்?


என் கணவரும் பல் டாக்டர்.இருவரும் சேர்ந்து தான் கிளினிக்கை பார்த்துக்கிறோம்.அவர் ரூட்கெனால் நிபுணர்.என் மாமனார் காது, மூக்கு  தொண்டை நிபுணர்.அதனால் முகம் சம்பந்தமான எந்த ஒரு சிகிச்சையும் இங்கு உடனடியாக  அளிக்கப்படும். அதற்கான சிறப்பு  நிபுணர்களும் உள்ளனர்.இந்தாண்டு என் கணவருக்கு தமிழ்நாடு அளவில் சிறந்த கிளினிக் விருது வழங்கப்பட்டது. பொதுவா சிறந்த  ஆசிரியர் மற்றும் டாக்டர் விருதுன்னு தான் கொடுப்பாங்க. மருத்துவ துறையில் தனியா கிளினிக் நிர்வகிப்பவங்களுக்கு அவங்களின்  திறமை மற்றும் செயல்பாடு பொருத்து தராங்க. அதில் இந்த வருடம் எங்க கிளினிக்குக்கு கிடைச்சு இருக்கு.

பெண்களுக்கு உங்க அறிவுரை?

எல்லாருக்கும் தனிப்பட்ட திறமை இருக்கும்.சிலர் நல்லா வரைவாங்க, பாடுவாங்க, சமைப்பாங்க... என்னதான் படிச்சு வேலைக்கு  போனாலும், நம் தனித்திறமைக்கான நேரத்தை ஒதுக்கணும்.அது நமக்கு மனநிம்மதியை கொடுக்கும். அதே சமயம் உங்களின் விருப்பம்  வீட்டுச்சூழலையும் பாதிக்கக் கூடாது. அது தேவையில்லாம வீட்டில் பிரச்னையை உருவாக்கும்.நீங்க செய்ய விரும்பும் விஷயத்தை உங்கள்  வீட்டில் உள்ளவர்களுக்கு புரிய வையுங்க. கண்டிப்பா புரிஞ்சுக்குவாங்க. என்னோட பர்சனல் அனுபவம். வருடத்தில் உங்களுக்கான  நேரத்தை ஒதுக்கிக்  கொள்ளுங்க. அதாவது நீங்களும் உங்க கணவர் மட்டும் நாலு நாள் எங்கேயாவது வெளியூர் போங்க. அது உங்களுக்கு  இடையே ஒரு பிடிப்பை ஏற்படுத்தும். இதுக்காக வெளிநாடுதான் போகணும்னு இல்லை. புதுச்சேரிக்கு கூட போயிட்டு வரலாம். டிரை  செய்து பாருங்க. உங்க வாழ்வும் வசந்தமாகும்.

-ப்ரியா
படங்கள் : ஆ.வின்சென்ட்பால்

Tags : Sakalakala ,doctor ,
× RELATED பூசணி விதையின் பயன்கள்!