×

கடலுக்கு சென்ற 1000 மீனவர்கள் கதி என்ன? உறவினர்கள் பரிதவிப்பு

சென்னை: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறி இன்று சென்னைக்கும், காரைக்காலுக்கும் இடையே கரையை கடக்கும் என வானிலை ைமயம் அறிவித்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடலூர் ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார். கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்று காலை முதலே பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதேபோன்று கடைகளும் பெரும்பாலும் மூடப்பட்டு விட்டன. விழுப்புரம் மாவட்டத்திலும் ரயில், பேருந்துகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.  நாகை மாவட்டத்தில் 9பல்நோக்கு நிவாரண மையங்கள், 22 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் 66 பொது மற்றும் தனியார் கட்டிடங்கள் நிவாரண முகாம்களாக செயல்பட தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் ஆறுகளில் ஏற்படும் உடைப்புகளை சரி செய்வதற்கு 83 இடங்களில் 1,42,998 எண்ணிக்கையிலான மணல் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. நாகை துறைமுகத்தில் நேற்று 5ம் எண் உள்ளூர் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நாகையில் இருந்து நீண்ட தூரங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தப்பட்டது. காரைக்காலில் நேற்று 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 200 மீனவர்கள் எங்கே?: புயல் எச்சரிக்கைக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாகை, அக்கரைப்பேட்டை, நம்பியார்நகர் பகுதிகளை சேர்ந்த 200 மீனவர்கள் நேற்று வரை கரை திரும்பாததால் மீனவர்களின் உறவினர்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோடியக்கரை இலங்கைக்கு இடையே கடலில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருவதால் விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற 200 மீனவர்கள் கரை திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் அவர்களை மீட்க இந்திய கடலோர காவல்படை கப்பலை அனுப்ப வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காரைக்காலில் 700 மீனவர் மாயம்: காரைக்கால் பகுதி கிளிஞ்சல்மேட்டில் இருந்து 250 படகுகளில் சென்ற மீனவர்களில் 700 பேர் இதுவரை கரை திரும்பவில்லை. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மெழுகுவர்த்தி வாங்க குவிந்த மக்கள்
திருவாரூர், தஞ்சை, புதுகை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று மின்சாரம் நிறுத்தப்பட்டு மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டன. புயல் கரையை கடக்கும் பட்சத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்ற எச்சரிக்கையைடுத்து பொதுமக்கள் கடைகளில் மெழுகுவர்த்தி வாங்குவதற்காக அதிக அளவில் நேற்று படையெடுத்தனர். இதன் காரணமாக பெரும்பாலான கடைகளில் மெழுகுவர்த்தி தட்டுப்பாடு என்பது ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும் மளிகை கடைகளுக்கு குவிந்தனர்.

Tags : fishermen ,sea ,relatives , What happened to the 1000 fishermen who went to sea? Consolation of relatives
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...