காவல் நிலையங்களில் கைதிகளை அடிப்பதற்காகவே கேமரா பொருத்தவில்லையா? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘கைதிகளை அடிப்பதற்கு வசதியாகதான் காவல்  நிலையங்களில் கேமரா பொருத்தவில்லையா?’ என தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நடக்கின்றன. தமிழகத்தில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அப்பாவிகளான தந்தை, மகனை போலீசார் கொடூரமாக அடித்துக் கொன்ற சம்பவம், நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா  பொருத்தப்பட்டு இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில்  பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த நீதிமன்றம், ‘நாடு முழுவதும்  அனைத்து மாநில காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ளதா?’ என்று  கேள்வி எழுப்பியதோடு, அது குறித்த அனைத்து விவரங்களும் அடங்கிய அறிக்கையை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்கள், யூனியன்  பிரதேச தலைமைச் செயலாளர்களுக்கும் கடந்த செப்டம்பர் 16ம் தேதி  உத்தரவிட்டது. இந்நிலையில், நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், கே.எம்.ஜோசப் மற்றும் அனிருத்தா போஸ் ஆகியோர் அமர்வில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகளிடம்  மூத்த  வழக்கறிஞர் ராகேஷ் திவேதி ஒரு கோரிக்கை வைத்தார்.  அதில், ‘‘நாடு முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் பெண்களுக்கு எதிரான  குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது.

அதனை கண்காணித்து தடுப்பதற்காக அனைத்து காவல் நிலையங்களிலும் பொருத்தமான  பெண் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்,’’ என்றார். அப்போது, குறுக்கிட்ட மத்திய  அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், அது குறித்த ஹெல்ப்லைன் பயன்பாடு  ஒன்றை நீதிபதிகளிடம் பரிந்துரை செய்தார். இதைத் ெதாடர்ந்து, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தரப்பில், அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா  பொருத்துவது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் அறிக்கையில், ‘தமிழகத்தில் முக்கியமான அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் திட்டம்  செயல்படுத்தப்பட்டுள்ளது,’ என தெரிவிக்கப்பட்டது. அப்போது, குறுக்கிட்ட  

நீதிபதி நாரிமண், ‘‘எப்படி என்றால், முக்கியத்துவம்  இல்லை என நினைக்கும் இடங்களில் இருக்கும் தமிழக காவல் நிலையங்களில் சிசிடிவி பொருத்துப்படுவது கிடையாதா?,

அல்லது  குற்றம் சாட்டப்பட்ட கைதிகளை அடிப்பதற்கு வசியாக இருப்பதால் அங்கு கேமராக்கள்  பொருத்தப்படவில்லையா?’ என சரமாரியாக கேள்விகள் கேட்டார். இதற்கு பதிலளித்த தமிழக  அரசு வழக்கறிஞர், ‘‘தமிழகத்தில் லாக் அப் அறைகள் முதல், காவல் நிலையத்தின் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள்  பொருத்தப்பட்டுள்ளன,’’ என தெரிவித்தார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகும் காட்சிகள், 45  நாட்களுக்கு ஒருமுறை தானாக அழியும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் அட்டூழியங்கள் காவல்  நிலையத்தில் நடந்தால், அதற்கான ஆதாரம் கேள்விக்குறியாக உள்ளது. அதனால், சிசிடிவியில்  பதிவாகும்  அனைத்து  காட்சிகளும் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும். மேலும்,  அது குறித்து உடனடியாக புகார் அளிக்கவும் வேண்டும்,’’ என தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Related Stories:

>