×

வாரணாசி மக்களவை தொகுதியில் மோடியின் வெற்றியை எதிர்த்த மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில், உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தொகுதியில் போட்டியிடுவதற்காக எல்லை பாதுகாப்பு படை முன்னாள் வீரர் தேஜ் பகதூர் தாக்கல் செய்த வேட்புமனு, தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, மோடியின் வெற்றியை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.  அதில், ‘வாரணாசி தொகுதியில் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிட்டேன். அதில், எனது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்ததால் மோடி எளிதாக வெற்றி பெற்று விட்டார். எனவே, அவருடைய வெற்றி செல்லாது என்று அறிவித்து உத்தரவிட வேண்டும்,’ என கூறினார்.

இதை விசாரித்த உயர் நீதிமன்றம், 2019, டிசம்பர் 19ம் தேதி மனுவை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்த்தில் தேஜ் பகதூர் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். கடந்த முறை இந்த வழக்கு வந்தபோது, விசாரணையை ஒத்திவைக்கும்படி பகதூரின் வழக்கறிஞர் கோரினார். ஆனால், அதை நிராகரித்த நீதிமன்றம், முழு வாதங்களையும் கேட்டு வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் கடந்த 18ம் தேதி ஒத்திவைத்தது. இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் போபண்ணா, ராமசுப்ரமணியன் அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில், ‘இந்த வழக்கில் அகலாபாத் உயர் நீதிமன்றம் தீர விசாரித்த பிறகே, தெளிவான உத்தரவை பிறந்பித்துள்ளது. அதனால், அதற்கு எந்தவித தடையும் விதிக்க முடியாது.  இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என நீதிபதிகள் அறிவித்தனர்.

Tags : Modi ,victory ,constituency ,Varanasi Lok Sabha ,Supreme Court , Petition against Modi's victory in Varanasi Lok Sabha constituency dismissed: Supreme Court verdict
× RELATED நாட்டு மக்கள் நன்றாக இருக்க வேண்டுமென...