முதல்வர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல் கொரோனா தடுப்பூசியை சேமிக்க மாநில அரசுகள் தயாராக வேண்டும்

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசியை சேமிக்க தேவையான குளிர்சாதன சேமிப்பு வசதிகளை தயார் செய்ய வேண்டுமென மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.  இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பு 50,000க்கு  கீழ் குறைந்துள்ள போதிலும், சில மாநிலங்களில் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள டெல்லி, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதில், மோடி கூறியதாவது:

வைரஸ் பரவல் தடுப்பில் சிலரது அஜராக்கிரதையால், மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. குணமாவோர் எண்ணிக்கை அதிகரிப்பதை பார்த்ததும், வைரஸ் பலவீனமாகி விட்டதாக சிலர் கருதுகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை நாம் விழிப்புடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.தடுப்பூசி விநியோக யுக்திகள் அனைத்து மாநில அரசுககளுடனும் ஒருங்கிணைந்து வகுக்கப்படும்.தடுப்பூசிகளை சேமித்து வைக்க தேவையான குளிர்சாதன  சேமிப்பு வசதிகளை மாநில அரசுகள் இப்போதே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தடுப்பூசி கிடைத்ததும் முதல்கட்டமாக முன்கள சுகாதார பணியாளர்களுக்கும்,  பின்னர், போலீஸ் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும். 3ம் கட்டமாக, 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 4ம் கட்டமாக பல்வேறு துணை நோய்களை கொண்டவர்களுக்கு தடுப்பூசி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>