போலீஸ் பாதுகாப்பு வேண்டுமா, வேண்டாமா? ஜெ.தீபா, தீபக் பதில் தர வேண்டும்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் ஆகியோர் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமா, வேண்டாமா என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளை விசாரித்த ஐகோர்ட், ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக்கை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்து, ரூ.188 கோடி மதிப்பிலான  சொத்துகளை நிர்வகிக்கும் உரிமையை வழங்கியது. அத்துடன், அவர்களின் சொந்த செலவில் அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் நீதிமன்றம் வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, எம்.எஸ்.ரமேஷ் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், காவல்துறை தீபா, தீபக்கிற்கு  பாதுகாப்பளிக்க தயாராக உள்ளது. அதற்கான முன்பணமாக 6 மாதத்திற்கு 20 லட்சத்து 83 ஆயிரத்தை செலுத்துமாறு போலீஸ் கமிஷனர் சார்பில் 2 மாதங்களுக்கு முன்பே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என்றார்.

தீபக் தரப்பில் ஆஜரான வழக்கீல், தனக்கும், தீபாவுக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டுமா என்று கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம் கிடைத்தது. அதுகுறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென தெரிவித்தார். அதற்கு அரசு தரப்பில், தீபா, தீபக்கிற்கு பாதுகாப்பு வேண்டும் என்றால் கடிதத்துக்கு பதிலளிக்க வேண்டும் எனவும், பாதுகாப்பு வேண்டாம் என்றால் நீதிமன்றத்தில் தெரிவித்து விடலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தீபா, தீபக் தரப்பில் பதிலளிக்க அவகாசம் அளித்த நீதிபதிகள் விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories:

>