இடி, மின்னலின் போது டிவி, மொபைல் பயன்படுத்தக்கூடாது:பொதுமக்களுக்கு மின்வாரியம் எச்சரிக்கை

சென்னை: இடி, மின்னலின் போது டிவி, மொபைல், கணினி, கிரைண்டர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: மின்சார பிளக்குகளை பொருத்துவதற்கு முன்னரும், எடுப்பதற்கு முன்னரும் சுவிட்ச் ஆப் செய்ய வேண்டும். உடைந்த சுவிட்ச்சுகளையும், பிளக்குகளையும் உடனே மாற்றி விட வேண்டும். பழுதடைந்த சாதனங்களை உபயோகப்படுத்தக்கூடாது. மின்சார கம்பத்திற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வையரின் மீது அல்லது மின் கம்பத்தின் மீது கொடி கயிறு, துணி காய வைப்பதை தவிர்க்க வேண்டும். மின் கம்பத்திலோ, அவற்றை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது.

மழை பெய்யும் போது மின்மாற்றிகள், கம்பங்கள், மின்பகிர்வு பெட்டிகள், ஸ்டே வயர்கள் ஆகியவற்றின் அருகில் செல்லக்கூடாது. மழையாலும், பெருங்காற்றாலும் அறுந்து விழுந்த மேல்நிலை மின்சார கம்பி அருகில் செல்லக்கூடாது. மின்சாதனங்கள் உபயோகத்தில் இல்லாத பட்சத்தில் சுவிட்ச்சை ஆப் செய்து வைக்க வேண்டும். பில்லர் பாக்ஸ் அருகில் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும்போது அதன் அருகில் செல்ல வேண்டாம். இடி அல்லது மின்னலின் போது டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி மற்றும் தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

Related Stories:

>