×

கஜா துயரே மீளாத நிலையில் நெருங்குகிறது நிவர்: பதைபதைப்பில் டெல்டா மக்கள்

கடந்த 2018 நவம்பர் 15ம் தேதி டெல்டா பகுதி மக்களின் வாழ்வை புரட்டிப்போட்ட நாள். கஜா புயல் ஆடிய கோரத்தாண்டவத்தால், லட்சக்கணக்கான மக்கள் வாழ்வதாரத்தை இழந்தனர். 15ம் தேதி நள்ளிரவு தொடங்கிய 16ம் தேதி காலை வரை வீசிய கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இருப்பினும், நாகை, திருவாரூர், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகக்கடுமையான பாதிப்பிற்குள்ளாகின. டெல்டா மாவட்டங்களில் 62.42 லட்சம் தென்னை மரங்கள் வேருடனும் பாதியாகவும் முறிந்து விழுந்தன.

குறிப்பாக, தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய வட்டங்களில் மட்டும் 45.07 லட்சம் தென்னை மரங்கள் சாய்ந்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 6.20 தென்னை மரங்கள் சேதமடைந்தன. இவை மட்டுமின்றி மா, பலா போன்ற லட்சக்கணக்கான மரங்களும் சாய்ந்தன. மின் விநியோகம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட சேவைகள் அடியோடி முடங்கின. கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசு இதுவரை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. புயல் வீசி 2 ஆண்டுகள் கடந்தாலும் இதுவரை மீள முடியாமல் கடனில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 25க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் அரசின் கணக்கெடுப்புப்படி 8 பேருக்கு மட்டுமே நிவாரண உதவி தலா ₹10 லட்சம் வழங்கப்பட்டது. மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரம் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் கணக்கிடப்பட்ட நிலையில் 60 சதவிகித பேருக்கு கூட நிவாரணத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் சென்றடையவில்லை. மேலும், 767 கால்நடைகள் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் இதில் பெரும்பாலான உரிமையாளர்களுக்கு நிவாரண தொகை கிடைக்கவில்லை.

வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பானது பெயரளவில் மட்டுமே இருந்து வருகிறது. 2 வருடங்கள் கடந்த பின்னரும் தற்போது வரை வீடுகளை இழந்தவர்கள் வீடில்லாமல் தவித்து வருகின்றனர். திருத்துறைப்பூண்டி அரசு கலைக் கல்லூரி கட்டிடம், ஆதிரங்கம் அங்கன்வாடி மையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் மற்றும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், பேருந்து நிழற்குடைகள் போன்றவைகள் கூட தற்போது வரை சரி செய்யப்படவில்லை. நாகை மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.

1 லட்சத்து 11 ஆயிரத்து 132 குடிசை வீடுகள் சேதமடைந்தது. 1 லட்சத்து 81 ஆயிரத்து 723 கால்நடைகள் உயிரிழந்தது. 2050 பைபர் மற்றும் விசைப்படகுகள் சேதம் அடைந்தது. 2 லட்சத்து 32 ஆயிரத்து 018 மரங்கள் சாய்ந்தது. 20 ஆயிரத்து 870 மின்கம்பங்கள் சாய்ந்தது. 573 கிமீ தூரத்திற்கு சாலைகள் சேதமடைந்தது. தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் அதிக அளவில் தென்னை விவசாயம் நடைபெறுவதால், அதிலிருந்து கிடைக்கும் மூலப்பொருளான தேங்காய் மட்டையிலிருந்து பஞ்சு, கயிறு தயாரிக்கும் 75க்கும் மேற்பட்ட கயிறு தொழிற்சாலைகள் உள்ளன. கஜாவால் அனைத்து தொழிற்சாலைகளும் சேதமடைந்தன.

விவசாயம் சார்ந்த பல்வேறு சேதங்களுக்கு இழப்பீடு வழங்கிய அரசு பல கோடி ரூபாயை இழந்து பாதிக்கப்பட்ட கயிறு தொழிற்சாலைகளுக்கு இது வரை இழப்பீடு வழங்கவில்லை. புதுகை மாவட்டத்தில் 2.17 லட்சம் வீடுகள் சேதமடைந்தது. லட்சக்கணக்கான மரங்கள் முறிந்தது. இதில் 10 சதவீதம் பேருக்கு இன்னும் நிவாரணம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி புதுகை பகுதி மக்கள் கூறுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட போது அரசு கட்டிடங்களில் தான் குடியிருந்து சமைத்து வாழ்க்கையை நகர்த்தி வந்தோம். புயலால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரணங்களை தருவதாக அறிவித்திருந்தது.

ஆனால் தங்கள் பகுதியில் உள்ள சில நபர்களை தவிர மற்ற யாருக்கும் இதுவரை அரசு அறிவித்த நிவாரண பணம் வந்து சேரவில்லை. மேலும் அரசு வீடு கட்டித் தருவதாக அறிவித்தது. அதையும் இதுநாள்வரை நிறைவேற்றவில்லை. இப்போது நிவர் புயல் வந்து கொண்டிருக்கிறது. எங்கள் மாவட்டமும் பாதிப்பை சந்திக்க கூடும் என்று அறிவித்துள்ளனர். எங்கள் வாழ்க்கை என்ன ஆகப்போகிறதோ தெரியவில்லை என்றனர்.

Tags : tragedy ,Nivar ,Delta , Gajah tragedy approaches irreversible
× RELATED தென், டெல்டா மாவட்டங்களில் 15ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு