×

ஐஎஸ்எல் 2020 கால்பந்து: சென்னையின் எப்சி-ஜாம்ஷெட்பூர் எப்சி இன்று மோதல்

கோவா: ஐஎஸ்எல் 2020 கால்பந்து தொடரில் இன்று சென்னையின் எப்சி அணி, ஜாம்ஷெட்பூர் எப்சி அணியை எதிர்த்து மோதுகிறது. இப்போட்டி இன்று மாலை கோவாவின் திலக் மைதானத்தில் நடைபெறுகிறது. நடப்பு தொடரில் இரு அணிகளுக்குமே இது முதலாவது லீக் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐஎஸ்எல் தொடர் வரை சென்னை அணியில் இடம் பெற்றிருந்த லிதுவேனிய வீரர் நெரிஜுஸ் வால்ஸ்கிஸ், இந்த தொடரில் இருந்து ஜாம்ஷெட்பூர் அணிக்காக ஆடுகிறார். கடந்த 2019 ஐஎஸ்எல் தொடரில் சென்னையின் எப்சி அணியில் முன்கள வீரராக இறங்கி, பிரமிக்கத்தக்க வகையில் வால்ஸ்கிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் கடந்த தொடரில் மொத்தம் 15 கோல்களை அடித்து, கோல்டன் பூட்ஸ் விருது பெற்றார். தற்போது சென்னை அணியை எதிர்த்து விளையாட உள்ளது சற்று த்ரில்லான அனுபவம்தான். ஆனால் ஏற்கனவே நான் கூறியபடி, நான் தொழில்முறை கால்பந்து விளையாட்டு வீரர். இப்போது ஜாம்ஷெட்பூர் அணியின் வீரர் என்பதும் முக்கியம்.

அதை மனதில் கொண்டு, இன்றைய போட்டியில் சென்னையை எதிர்கொள்வேன்’’என்று வால்ஸ்கிஸ் தெரிவித்துள்ளார். கடந்த தொடர் வரை சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்த ஓவன் கோய்ல், ஜாம்ஷெட்பூர் அணியின் பயிற்சியாளராக மாறினார். அவர் அணி மாறும்போது, கூடவே வால்ஸ்கிசையும் அழைத்து சென்று விட்டார். 17 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிதேந்திரா சிங், சர்வதேச போட்டிகளில் கலக்கிய இங்கிலாந்தின் புகழ் பெற்ற பீட்டர் ஹாட்லே, பிரேசிலின் அனுபவ வீரர் அலெக்ஸ் லிமா, நைஜீரிய வீரர் ஸ்டீபன் எஸ், ஆஸ்திரேலிய வீரர் நிகோலஸ் பிட்ஜெரால்ட் என ஜாம்ஷெட்பூர் எப்சி அணி, வலிமையாகத்தான் மிரட்டுகிறது. சென்னை அணியிலும் ஸ்ட்ரைக்கர் ரஃபேல் கிரிவெல்லாரோ, முன்கள வீரர் அனிருத் தாபா, எனஸ் சிபோவிக், எஸ்மேல் கொன்கால்வஸ், ஜெரிலால்ரின் சுவாலா என அனுபவ சர்வதேச வீரர்களும் இன்று மல்லுக்கட்ட உள்ளனர்.

இரு அணிகளும் ஐஎஸ்எல் தொடரில் இதுவரை 6 போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில் 2 போட்டிகளில் சென்னையின் எப்சி வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் ஜாம்ஷெட்பூர் வென்றுள்ளது. 3 போட்டிகள் டிராவில் முடிவடைந்துள்ளன. இரு அணிகளிலுமே வலிமையான பின்கள வீரர்கள் உள்ளனர் என்பதால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் கோல் விழும் என்ற நிலை. இருப்பினும் கடந்த தொடர் வரை சென்னையின் எப்சியாக இருந்த பயிற்சியாளருக்கு, சென்னை அணியின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது தெரியும் என்பதால் அதற்கேற்ப வியூகங்களை வகுத்து, இன்று சிக்கலை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டி சென்னைக்கு சவாலான ஒன்றுதான் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒடிசாவை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி
நேற்று கோவா, ஜிம்சி ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் ஐதராபாத் அணி, 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா அணியை வென்றது. ஆட்டம் துவங்கிய முதல் 10 நிமிடங்களுக்கு, ஐதராபாத் அணியே ஆதிக்கம் செலுத்தியது. பந்தை முழுவதுமாக தங்களது கட்டுப்பாட்டில் அந்த அணியின் முன்கள வீரர்கள் வைத்திருந்தனர். இருப்பினும் கோல் அடிக்க முடியவில்லை. பின்னர் ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் ஐதராபாத்துக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி அரிடேன் சான்டனா, அற்புதமாக கோல் அடித்தார். அதன் பின்னர் 2ம் பாதியில் இரு அணிகளுமே, கோல் அடிக்கவில்லை.


Tags : Chennai FC-Jamshedpur FC , ISL 2020 Football: Chennai FC-Jamshedpur FC clash today
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...