நிவர் புயலால் சீற்றத்துடன் காணப்படும் கடல்: கடலோரங்களில் வசிக்கும் மீனவர்கள் அச்சம்

மாமல்லபுரம்: நிவர் புயல் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலோரங்களில் வசிக்கும் மீனவர்கள் அச்சத்துடன் உள்ளனர். நிவர் புயல் கரையை கடக்கும் பகுதி என கணிக்கப்பட்ட மாமல்லபுரத்தை அடுத்த காட்டுக்குப்பத்தில் நேற்றிரவு முதலே கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கரை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளையும், வலை உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களையும் பாதுகாப்பான பகுதிகளில்  நிறுத்தி வைக்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். புயல் நாளை கரையை கடக்கும் போது காற்றின் வேகம் அதிகரிக்கும் என்பதால் மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

நாகை மாவட்டத்தில் பல மீனவ கிராமங்கள் கஜா புயலின் தாக்கத்தில் இருந்தே இன்னும் வெளிவராத நிலையில் மீண்டும் நிவர் புயல் எதிர்கொள்ள அவர்கள் தயாராகி வருகின்றனர். இதேபோல சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. திருவொற்றியூர், எண்ணூர், மணலி மற்றும் மாதவரம் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. ஜோதிநகர் அருகே மணலி விரைவு சாலையில் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகிறது.

கார்கில் நகர், ராஜாஜி நகர் பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூர்ந்துள்ளதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். திருவொற்றியூர், எண்ணூரில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

Related Stories:

>